அம்மா ஆசைக்காக டாக்டராகவும், தன்னுடைய ஆசைக்காக அரசியல்வாதியாகவும் மாறியதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள டிஎஸ்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார், நிகழ்ச்சியில் பேசிய அவர், தான் அரசியல்வாதியாக மாறிய கதையை மாணவிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் தெரிவித்தார்.
அரசியல்வாதியாக ஆசை:
அவர் பேசுகையில், “நான் இன்னைக்கு அரசியல்வாதியா இருக்கேன். டாக்டர் எப்படி ஆனேன் தெரியுமா?. நான் 6ஆம் வகுப்பு படிக்கும் போது எங்க டீச்சர் எல்லோரையும் எழுப்பி விட்டு யார் யார் என்ன என்ன ஆக வேண்டும் என நினைக்கிறீங்க என கேட்டார். ஒருத்தர் டாக்டர், ஒருத்தர் இன்ஜீனியர்ன்னு சொல்ல, நான் எந்திரிச்சி எங்க அப்பா மாதிரி அரசியல்வாதி, எம்.எல்.ஏ. ஆகணும்ன்னு சொன்னேன். எங்க அப்பா அந்த டைம்ல தான் ராயபுரம் தொகுதியில நின்னு தேர்தல்ல தோற்று போயிருந்தாங்க.
இதை சொன்னா எங்க அம்மா மகிழ்ச்சியடைவாங்கன்னு நினைச்சி எங்க டீச்சர் மதியம் பள்ளிக்கு வந்த அவரிடம் விஷயத்தை பெருமையாக சொன்னார். ஆனால் எங்க அம்மா வீட்டுக்கு அழைத்து வந்து அடி வெளுத்து விட்டார். நீ டாக்டர் ஆக வேண்டும் என அவர் சொன்னார். அதனால் எங்க அம்மா ஆசைக்காக டாக்டர் ஆனதும், என் ஆசைக்கு அரசியல்வாதியாக மாறிவிட்டேன். அதனால எங்க அம்மாவோட ஆசையை நான் விட்டுக் கொடுக்கல. அவங்க அடிக்கடி சொல்வாங்க.
கோட்டும் ஒயிட், நோட்டும் ஒயிட்:
டாக்டராகி நல்ல சம்பாதிச்சி அப்புறம் அரசியலுக்கு வரணும். வேலையே இல்லாமல் அரசியலுக்கு வந்தா மத்தவங்க பணத்தை சுருட்டுறக்கான வாய்ப்பு அதிகம்ன்னு சொன்னாங்க. பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டபோது என்னிடம் இதனால உங்களுக்கு எதுவும் பிரச்சினையான்னு எல்லோரும் கேட்டாங்க. பிரச்சனையே இல்லன்னு சொல்ல, ஏன்னு கேட்டாங்க. நான் அதுக்கு என் கோட்டும் வெள்ளை, நோட்டும் வெள்ளை. நாங்க சம்பாதிச்சது என்னோட டாக்டர் தொழில் பெற்றது என தமிழிசை கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நமக்குன்னு ஒரு தொழில் இருக்க வேண்டும். நமக்கென ஒரு முயற்சி இருக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் அந்த நாளை மிகச்சிறப்பானதாக மாற்ற வேண்டும். இந்த பள்ளி வாழ்க்கை என்பது அரிய வாழ்க்கை. அதனை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். தன்னம்பிக்கையோடு எந்த பிரச்சினை வந்தாலும் வாழ்க்கை வாழ்வதற்குதான் என எண்ண வேண்டும். என்னை இதற்கு முன்னாள் சமூக வலைத்தளத்தில் பார்த்திருப்பீர்கள்.
பரட்டை, கருப்பு, குள்ளம் என விமர்சனம்:
என்னை கருப்பு, பரட்டை, குள்ளம் என விமர்சிப்பார்கள். என்னை உயரம் குறைவு என சொல்ல சொல்ல உயர உயர போய்ட்டே இருப்பேன். கருப்புன்னு சொன்னா நெருப்பு மாதிரி போவேன். பரட்டைன்னு சொன்னா பறந்து பறந்து உயர்ந்து போவேன். ஆக, நம்மை யாராவது எதாவது சொன்னா, நாம் மேலே செல்வதற்கான பாதை என நினைக்க வேண்டும் என அந்நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.