கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஓசூர், தளி,  கெலமங்கலம், பேரிகை, பாகலூர்  உள்ளிட்ட பகுதிகளில்  குளிர்ந்த சீதோசன நிலை இருப்பதால், இப்பகுதிகளில் அதிகளவில் மலர் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், இப்பகுதிகளில்  ரோஜா மலர்கள் அதிகளவில் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.

இதனால் ஓசூர் விவசாயிகள் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரபப்பில் பசுமை குடில்கள் அமைத்து ரோஜா மலர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். தாஜ்மஹால். ரோடோஸ்,  நோப்ளாஸ், கோல்ட் ஸ்டிரைக், சவரன், அவலஞ்சர், பெர்னியர், உள்ளிட்ட 8 வகையான ரோஜா மலர்கள் விளைவிக்கப்படுகிறது. ஆண்டுதோறும், கிறிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாடத்திற்கு ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்பப்படுகிறது. இருந்தாலும் காதலர் தின  கொண்டாடத்திற்கு மட்டும் அதிகளவில் ரோஜா மலர் ஏற்றுமதி செய்யவது வழக்கம்.  இதில் தாஜ்மஹால், அவலாஞ்சி ஆகிய பூக்கள் சிங்கபூர், மலேசியா, மற்றும் ஐக்கிய அரசு நாடுகளுக்கு 40 லட்சம் ,  ஐரோப்பிய நாடுகளுக்கு 10 லட்சம்  ரோஜாக்களை விவசாயிகள் அனுப்பி வந்தனர்.

 

  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெய்த  தொடர் மழையின் காரணமாக டவுனிங் என்ற நோய் தாக்கம் ஏற்பட்டு, ரோஜா மலர் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இது போன்ற  நோய் தாக்கம் இருந்தால் தரமற்ற ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் பிரச்சனை ஏற்படும், இதனால் இந்த ஆண்டு ரோஜா ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது உலக சந்தையில் புதிய ரகங்கள் அறிமுகம் செய்யப்படும் நிலையில், இந்தியாவில் தொடர்ந்து பழைய ரகங்களையே சாகுபடி செய்யப்படுகின்றனர்.  இதனால் ஓசூர் ரோஜாக்களுக்கு வெளி நாடுகளில் மவுசு குறைந்துள்ளது.



 

 

உள்ளூர் மார்க்கெட்டில் ரோஜாக்களை விற்பனை செய்ய விவசாயிகள் முயற்சி  செய்கின்றனர்.  ஆனால் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் லாபம் இங்கு கிடைப்பதில்லை மேலும் உள்ளூர் பகுதிகளில் நடைபெறும் திருமணம் மற்றும் வரவேற்பு விழாக்களில் ரோஜா பூக்களை பயன்படுத்தினால், ஓரளவுக்கு லாபம் கிடைக்கும் ஆனால் இது போன்ற விழாக்களில் காகித பூக்களை பயன்படுத்துகின்றனர். காகித பூக்களுக்கு தடை விதித்து விவசாயிகள் உற்பத்தி செய்யும் ரோஜாக்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

 

 இது குறித்து ரோஜா விவசாயி  முனிவெங்கடப்பா கூறும் போது, ”இங்கு 8 வகையான ரோஜா மட்டுமே உற்பத்திசெய்யப்படுகிறது. வெளிநாடுகளில்  கடும் போட்டியால் பல்வேறு ரக ரோஜா உற்பத்தி செய்யப்படுகிறது.  இதனால் நமது நாட்டு ரோஜாவிற்கு வெளி நாடுகளில் மவுசு குறைந்துள்ளது. ஆண்டுதோறும் படிப்படியாக ஆர்டர் குறைந்து வருகிறது. வெளி நாடுகள் ஏற்றுமதிக்காக ரோஜா சாகுபடி செய்து வந்தோம். வெளி நாடுகளில் மவுசு குறைந்ததால் உள்ளூர் மார்க்கெட்டில் உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் ரோஜா உற்பத்திசெய்யும் விவசாயிகளும் படிப்படியாக குறைந்துள்ளனர். சில விவசாயிகள் ரோஜா விவசாயத்தை கைவிட்டு மாற்று விவசாயத்திற்கு மாறி உள்ளனர். இந்நிலையில்  நடப்பாண்டு தொடர் மழை மற்றும் பனியின் காரணமாக ரோஜா உற்பத்தி பாதித்துள்ளதால் தரம் இல்லாத ரோஜா உள்ளதால், வெளி நாடுகளிலிருந்து ஆர்டர் கிடைக்கவில்லை, இதனால் ரோஜா விவசாயத்தை ஊக்கவிக்க தமிழக அரசு, அரசு மற்றும் திருணம விழாவில் பிளாஸ்டிக் பூக்களை பயன்பாட்டிற்கு பதில் ரோஜா பூக்களை பயன்படுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், இல்லை என்றால் ஓசூரில் ரோஜா உற்பத்தி முற்றிலும் குறைந்துவிடும்” என கூறினார்.