முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக புகழ்பெற்றது. இங்கு, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.


மேலும்,  பழனி அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதான வழிகளாக உள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் மலைக்கோவிலுக்கு செல்ல ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகிய சேவைகளும் உள்ளது. 




பாதயாத்திரை பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் ஆகியோர் மேற்கண்ட படிப்பாதைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். மற்ற பக்தர்கள் ரோப்கார், மின்இழுவை ரயில் மூலம் மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்ல முடிவதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக ரோப்கார் சேவை உள்ளது.


இந்த ரோப்கார் செயல்பாட்டுக்காக அடிவாரம் கிழக்கு கிரிவீதி மற்றும் மலைக்கோவில் பகுதியில் ரோப்கார் நிலையம் உள்ளது. ரோப்காரில் பயணிக்க, காத்திருந்து செல்பவர்களுக்கு  15 ரூபாயும், முன்னுரிமை அடிப்படையில் செல்பவர்களுக்கு  50 ரூபாயும் என இருமுறைகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.


கொரோனா பரவல் காரணமாக கூட்டத்தை கட்டுப்படுத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோப்காரில் 15 ரூபாய் கட்டண முறை நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து  50 ரூபாய் கட்டண சேவை மட்டுமே தொடர்ந்து வருகிறது.




பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம் 


இந்நிலையில் கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் வசதியை தேர்வு செய்கிறார்கள். ஆகையால் மாதாந்திரம், வருடாந்திரம் என ரோப்கார் சேவை பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


அதன்படி பழனி முருகன் கோவிலில் இயங்கும் ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இன்று ரோப்கார் சேவை இயங்காது. ஆகையால்  பக்தர்கள் படிப்பாதை, மின் இழுவை ரெயிலை பயன்படுத்தி மலைக்கோவில் சென்று வரலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.