தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் மற்றும் மரிய மைக்கேல் ஆகியோருக்கு ஜீவன் ரக்‌ஷா விருதினை வழங்கி பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.




நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடை மிதிப்பான் குளம் கிராமத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் திசையன்விளையை சேர்ந்த செல்வராஜூக்கு சொந்தமாக இயங்கி வரும் கல் குவாரியில் கடந்த 14ஆம் தேதி பாறைகள் சரிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த குவாரி விபத்தில் உயிரிழந்த செல்வம், செல்வகுமார், முருகன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.




குறிப்பாக தூத்துக்குடி பகுதியை சேர்ந்த மரிய மைக்கேல் என்பவர் மீட்பு பணியில் ஈடுபட்டார் இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இருப்பினும் மீட்புப்பணியில் அதிக அனுபவம் கொண்ட மரிய மைக்கேல் தனது ஓய்வு காலத்திலும் இதுபோன்ற பேரிடர்களில் மீட்பு பணி குறித்து வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். எனவே மரிய மைக்கேல் கல்குவாரி விபத்து மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.அவர் ஆரம்பம் முதல் கடைசி வரை அங்கேயே இருந்து மீட்புப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். எனவே அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டும் பரிசுகளும் வழங்கினர்.


இந்நிலையில் மத்திய அரசு வீரதீரச் செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா விருதினை அறிவித்தது. இதில் கல்குவாரி மீட்பு பணியில் கடைசி வரை தன்னை ஈடுபடுத்தி கொண்ட மரிய மைக்கேலுக்கு ஜீவன் ரக்‌ஷா விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து ஜீவன் ரக்‌ஷா விருதினை தலைமை செயலகத்தில் வைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி கெளரவித்தார்.




இதே போன்று கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி பழைய குற்றாலத்தில் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்ட 8 வயது சிறுமியை தனது உயிரையும் பொருட்படுத்தாது காப்பாற்றிய விஜயகுமாருக்கும் ஜீவன் ரக்‌ஷா விருதினை முதல்வர் வழங்கினார்.


கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தின் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இந்த சம்பவம் நடந்தது. தூத்துக்குடி விளாத்திகுளத்தை சேர்ந்த விஜயகுமார் (24) என்பவர் அப்பகுதியில் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றபோது இந்த சம்பவம் நடந்தது. அப்போது கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஹரிணி என்ற எட்டு வயது சிறுமி குடும்பத்துடன் அருவிகளில் குளித்துக் கொண்டிருந்தபோது வழுக்கி தண்ணீரில் விழுந்து பாறைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டார்.சம்பவத்தை பார்த்த விஜயகுமார், உடனடியாக செங்குத்தான பள்ளத்தாக்கில் குதித்து, பலத்த நீரோட்டத்தில் தத்தளித்து கொண்டிருந்த குழந்தையை தூக்கி சில நிமிடங்களில் பாதுகாப்பாக அழைத்து வந்தார். இவரது செயலை பாராட்டி அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  இளைஞர் விஜயகுமாரை கவுரவித்து, தற்காலிக கார் ஓட்டுநராக பணி வழங்கினார்.




இந்நிலையில் மத்திய அரசு வீரதீரச் செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா விருதினை அறிவித்தது. இதில் குற்றாலத்தில் தனது உயிரை பொருட்படுத்தாமல் வெள்ள நீரோடையில் அடித்து செல்லப்பட்ட 8 வயது சிறுமியை காப்பாற்றிய விஜயகுமாருக்கு ஜீவன் ரக்‌ஷா விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து ஜீவன் ரக்‌ஷா விருதினை தலைமை செயலகத்தில் வைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி கெளரவித்தார்.