தமிழ்நாட்டில் மீண்டும் உணவு சார்ந்த மரண சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. 


‘இந்த பிறப்பு தான் ரொம்ப ருசிச்சி சாப்பிட கிடைச்சது’ என ஒரு சினிமா பாடல் வரி உண்டு. உண்மையில் சாப்பிடுவதற்காக ஊர், ஊராக செல்லும் நபர்களும் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கிறார்கள். ஏதேனும் ஒரு உணவை எடுத்துக் கொண்டால் கூட அந்த ஹோட்டலில், இந்த ரோட்டு கடையில் சுவையாக இருக்கும் என சொல்கிற நாம் அது சுத்தமாக இருக்கிறதா என யோசிப்பதே இல்லை. விளைவு உடல் நலம் பாதிப்பு தொடங்கி உயிரிழப்பு வரை தொடர்கிறது. 


இப்படியான பிரச்சினைகள் எழும்போது மட்டும் மக்கள் உஷாராக இருக்கக் கூடாது. எல்லா நேரங்களிலும் உணவின் தரம் தொடர்பான விஷயங்களில் தெளிவாக இருக்க வேண்டும். மேலும் இதுபோன்ற பிரச்சினைகள் எழும்போதெல்லாம் சம்பந்தப்பட்ட இடங்களில் உடனடியாக தமிழ்நாடு அரசின் உணவுப்பாதுகாப்புத் துறையினரும் சோதனையிட்டு அபராதம் தொடங்கி கைது வரை என பல்வேறு நடவடிக்கைகளும் எடுத்து வருகிறார்கள். 


ஆனால் சில தினங்களுக்கு முன் நாமக்கலில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இம்முறை உணவுத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனையை மேற்கொண்டதில் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் வெளியாகியுள்ளது. தரமில்லாத உணவு விற்பவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டுமென அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். 


 


பல உணவகங்களில் (பிரபலமான ஹோட்டல்கள்) கூட கெட்டுப்போன உணவுகள், இறைச்சிகள் எல்லாம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. உணவின் தரம் தான் இப்படி இருக்கிறது என்றால், குடிக்கும் தண்ணீர் தொடங்கி ஹோட்டலின் சுகாதாரம் வரை எல்லாமே கேள்விக் குறியாகவே உள்ளது. திருச்சியில் 140 கிலோ, ஈரோட்டில் 34 கிலோ, திருவண்ணாமலையில் 30 கிலோ என கெட்டுபோன இறைச்சிகள், உணவுள் அழிக்கப்பட்டது. இந்த சோதனையாது இன்னும் தொடர உள்ளது. புற்றீசல் போல நாளொருமேனி பொழுதொரு வண்ணமுமாக உணவகங்கள் தொழில் வளர்ந்து வருகிறது. இதில் தெரிந்தே சுகாதாரமற்ற உணவுகளை விற்கும் உணவங்கள் மேல் அரசு தற்போது எடுக்கும் நடவடிக்கைகள் போதவில்லை என்பதே பெரும்பாலனவர்களின் ஆதங்கமாக உள்ளது. 


மத்திய, மாநில அரசுகள்  உணவகங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டும் பெரிய அளவில் அதனை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. அதனைப் பற்றி நாம் காணலாம். 


உணவுப் பொருட்கள் பாதுகாப்பு


முதலில் உணவுப் பொருட்கள் பாதுகாப்பில் அதீத கவனம் வேண்டும். அதன் காலாவதி தேதி தொடங்கி பதப்படுத்தும் வெப்பநிலை வரை எல்லாம் சரியாக கவனத்தில் கொள்ள வேண்டும். பொருட்கள் குளிர்பதனப் பெட்டிகளில் வைக்கப்படும் சூழல் ஏற்பட்டால் அது முதலில் சுத்தமாக இருக்க வேண்டும். அதேபோல் சைவ, அசைவ உணவுகளை ஒன்றுடன் ஒன்று கலந்து வைக்காமல் தனித்தனியாக முறைப்படுத்தி பதப்படுத்துதல் வேண்டும்.


விதிமுறைகள் 


சமையலறை அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டும், கண்டிப்பாக புகைப்போக்கி வைத்திருக்க வேண்டும். உணவை குறிப்பிட்ட சூட்டில் தான் சமைக்க வேண்டும். தேவையில்லாமல் சுவைக்காகவும், நிறமூட்டவும் எதையும் சேர்க்கக்கூடாது. சமைப்பவர்கள் கை உறை, தலையுறை அணிந்தும் இருக்க வேண்டும். அங்கு பயன்படுத்தும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும். உணவுப் பொருட்களில் ஈக்கள், பூச்சிகள்  அண்டாத வண்ணம் இருக்க வேண்டும். 


வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் பொருட்களை சுடுநீரில் சுத்தமாக கழுவ வேண்டும். ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் போன்றவற்றை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என பல விதிகள் உள்ளது. இவை எங்கும் ஒழுங்காக பின்பற்றப்படுகிறதா என்றால் கேள்வி தான்.


மேலும் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் நிலையில் உணவு பாதுகாப்பு தொடர்பாக www.foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் கைபேசி செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகளை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும். இதில் புகார்களையும் பதிவு செய்யலாம். 


உண்மையில் ஹோட்டல் உரிமையாளர்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாக தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் போது, சற்றே சிந்தித்து பார்க்க வேண்டும். தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் இதுபோன்ற உணவுகளை உண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டால் பார்த்துக்கொண்டு இருப்பார்களா? என தங்களை தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். அப்படியாவது இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். எனவே உங்கள் உணவகங்களுக்கும் அதிகாரிகள் சோதனைக்கு வரலாம். ரெடியா இருங்க..!