கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார். 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மழை காரணமாக விடுமுறை விடப்படுகிறது. அதேசமயம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தாது” எனவும் தெரிவித்துள்ளார். 


இதற்கிடையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே இலேசான மழை முதல் மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.  இதனிடையே  சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (செப். 21) காலை 9 மணி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


அதேசமயம் மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி,  கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.