அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை 10.30 மணிக்கு தனது குடும்பத்தினர் மற்றும் ஓபிஎஸின் தீவிர ஆதரவாளருமான ஆளங்குளம் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் டெல்லி சென்றார். நாடாளுமன்றத்தில் நாளை காலை 11.05 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியானது.


பிரதமர் நரேந்திர மோடி உடனான இந்த சந்திப்பில் காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணைக்கட்ட மத்திய அரசு தடை விதிக்கக் கோரி அதிமுக தரப்பில் வலியுறுத்தப்படும் என கூறப்பட்டாலும், தனக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே நடக்கும் உட்கட்சி பிரச்னைகள், சசிகலாவின் அரசியல் நடவடிக்கைகள், ஓ.பி.ரவிந்திரநாத்திற்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவது, உள்ளாட்சித் தேர்தல் கூட்டணிகள்  உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்பட்டு வந்தது. 


மேகதாது அணை, நீட் தேர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பிரச்னைகளில் திமுக அரசை கண்டித்து வரும் 28ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை விடுத்திருந்தனர்.



இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றதை அடுத்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் இன்றிரவு டெல்லி செல்கிறார். தற்போது சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருக்கும் அவர், கோயம்புத்தூர் விமான நிலையம் வழியாக டெல்லி செல்வார் என தகவல் வெளியாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் இந்த பயணத்தின் போது அதிமுக எம்.எல்.ஏக்கள் வேலுமணி, தங்கமணி, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோரும் டெல்லி செல்கின்றனர்.  



நாளை காலை 11.05 மணிக்கு நாடாளுமன்றத்திலேயே பிரதமர் நரேந்திரமோடியை ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே சேர்ந்து சந்திப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அண்மையில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் திமுக அரசு தயார் செய்து வருவது, அதிமுகவில் மதுசூதனன் தலைமையிலான அணியினருக்கே அதிமுக சொந்தம் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை சசிகலா சந்தித்தது, தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல், அதிமுகவிற்கு மத்திய அமைச்சரவையில் இடம் தருவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் உடனான சந்திப்பில் பேசப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.