பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் சரவணா ஸ்டோர் நகைக்கடை மீது இரு பிரிவுகளின் கீழ் மாம்பலம் போலீஸ் வழக்குப்பதிவு செய்ததுள்ளனர்.  ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த பெண் மருத்துவர் திரிவேணி அளித்த புகாரில், கடந்த  2016-ம் ஆண்டு 23.630 கிராம் தங்க செயின் வாங்கியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு வாங்கிய தங்கச் செயினானது கடந்த 2019 ஆம் ஆண்டு அறுந்து விழுந்ததாகவும் அறுந்து விழுந்த செயினை எடுத்து பார்த்தபோது அதனுள் வெள்ளி கம்பிகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்தால், உடனடியாக இதுகுறித்து சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மேலாளரிடம் சென்று முறையிட்டபோது, நகை செய்யும்போது இது தெரியாமல் நடந்திருக்கலாம் எனவும் அதற்காக அவர் மன்னிப்புக் கேட்டு வேறு நகைகளை மாற்றி கொடுத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில் கடந்த 2015 -ம் ஆண்டு வாங்கிய வளையல் சமீபத்தில் உடைந்து போனதாகவும், அப்போது அதை சோதனை செய்து பார்த்தபோது வளையல் கற்களுக்கு கீழே அதிக அளவில் அரக்கு வைக்கப்பட்டு தங்களை ஏமாற்றியதாகவும், தாங்கள் வாங்கிய இரண்டு நகைகளிலும் தங்களை ஏமாற்றியது போல், பல வாடிக்கையாளர்களை இதேபோல் போலியாக தங்க நகை கொடுத்து ஏமாற்றி இருக்கலாம் எனவும் இதனால் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவும் அவர் கடந்த ஜூன் 22ஆம் தேதி மாம்பலம் காவல் நிலையம் மற்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் தபால் மூலம் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவித்திருந்தார்.



இதனையடுத்து, காவல்துறை சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகையின் மீது சரியான முறையில் நடவடிக்கை எடுக்காததால் மருத்துவர் திரிவேணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். மருத்துவர் திரிவேணியிடம் இரண்டு முறை போலியான தங்க நகைகளை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என நீதிமன்றம் மாம்பலம் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.




இதனைத் தொடர்ந்தும் ஆம்பல் காவல்துறையினர் வழக்கை விசாரித்தபொழுது , சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மருத்துவர் திரிவேணியை இரண்டு முறை போலியான தங்க நகைகளை கொடுத்து ஏமாற்றியது தெரிய வந்தது. இதனடிப்படையில் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை நிர்வாகத்தின் மீது மாம்பலம் போலீசார் மோசடி செய்தல் மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா விதிமுறைகளை மீறியதாக சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோருக்கு ரூ.5 இலட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. விற்பனையை அதிகரிக்க அளவுக்கு அதிகமான வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதித்தாக எழுந்த குற்றச்சாட்டில் சரவணா ஸ்டோருக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட திருச்சியை சேர்ந்த பிரபலமான நகை கடையில் போலி நகைகளை விற்பதாக குற்றச்சாட்டு எழுந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.