சென்ற வாரம் நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தியதை போல் விரைவில் வேலூர் மாவட்டத்திலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என்னும் திட்டம் விரைவில் அமல்படுத்த உள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார் .

 

கொரோனா மூன்றாம் அலையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கும் ,  மற்றும் கொரோனா நோய் பரவலை முற்றிலுமாக தடுத்து நிறுத்தவும் , தற்போதைக்கு மத்திய மாநில அரசுகள் தடுப்பூசிகளை மட்டுமே பேராயுதமாக நம்பி தடுப்பூசி போடும் பணிகளை நாடு முழுவதும் தீவிர படுத்தியுள்ளனர் .

 

அதேசமயம் படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை பலரும் தடுப்பூசி போட ஆர்வம் காட்டாமல்
  பல வதந்திகளைப் பரப்பிவருகின்றனர் .

 



 

இந்நிலையில் , நீலகிரி மாவட்டத்தில் ஆதார் அட்டை மற்றும்  கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழைக் காண்பித்தால் மட்டுமே குடிப்பிரியர்களுக்கு  மது வழங்கப்படும் என்று நீலகிரி  மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா சென்ற வாரம் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

 

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்யப்படும். தடுப்பூசி போடாதவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படாது என்னும் உத்தரவை  நீலகிரியிலுள்ள அனைத்து அரசு மதுபான கடைகளிலும் கண்டிப்பாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது .

 

நீலகிரியைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்திலும் இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் தீவிரப்படுத்தும் விதமாகத் தினமும் 50 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது .

 

அதன்படி இன்று வேலூர் மாநகராட்சி பகுதியிலுள்ள  அனைத்து வியாபாரிகளும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் , தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது   . இது ஒருபுறம் இருக்க வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியையும் மாவட்ட ஆட்சியர் தீவிரப் படுத்தியுள்ளார் .

 



 

 இந்த நிலையில் இன்று காலை வேலூர் பழைய பேருந்து  நிலையத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட  ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்தார் கடைகளில் உள்ள வியாபாரிகள் தடுப்பு ஊசி செலுத்தி இருக்கிறார்களா என நேரில் சென்று கேட்டறிந்தார் .

 

அப்போது தடுப்பூசி போடாத வியாபாரிகளுக்கு அங்கேயே கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டது மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் அசம்காட்டிவந்த வியாபாரிகள் சிலர் , ஆட்சியரைக் கண்டதும் ஓட்டம் பிடித்தனர் அவர்களைச் சுகாதார ஊழியர்கள் விரட்டிச் சென்று பிடித்து வந்து தடுப்பூசி செலுத்தினர் . மேலும் தடுப்பூசி செலுத்துவதில்  நன்மை குறித்து வியாபாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தார் .

 

தொடர்ந்து நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையம், கொணவட்டம் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்  மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஆகியோர்களிடம் வரும் சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் 250 சிறப்பு முகாம்களை அமைத்து ,  மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணியினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி ஆலோசனை வழங்கினார் .

 

இதனைத் தொடர்ந்து  வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

 

அப்போது திருவள்ளுவர் சிலைக்குப் பின்புறம் கால்வாயிலிருந்து கழிவு நீர் வெளியே தரைப்பகுதியில் வடிந்துகொண்டு இருந்தது , இதனைப் பார்த்துக் கடுப்பான மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இதுபோல் கழிவு நீர் வெளியேறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் பேருந்து  நிலையத்தில் பல்வேறு இடங்களில் சுத்தமாக இல்லை அந்த இடங்களைத் தினமும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் பரவாத வகையில் அனைத்து இடங்களிலும் சுத்தம்  செய்திருக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் இதையடுத்து பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் சிலை பின்புறம் கால்வாயிலிருந்து வெளியேறிய கழிவுநீரை , கழிவுநீர்  வாகனம் மூலம் அப்புறப்படுத்தும் பணி தொடங்கி நடத்தப்பட்டது .

 

  பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேலூர் மாவட்டத்தில் 13 லட்சம் பேருக்கு கொரோனா  தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது தற்போது 6.50 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர் கல்லூரி மாணவர்கள் அனைவரும் 100% தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் . 

 



 

 பள்ளி கல்லூரி  ஆசிரியர்களும் 100 %  தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என மறுஆய்வு செய்யும்பணி தொடங்கப்பட்டுள்ளது .  தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கண்டிப்பாகத் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பெற்றோர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அவர்கள் மூலம் குழந்தைகளுக்கு எளிதில் பரவுவதைத் தடுக்க முடியும் என்று தெரிவித்த மாவட்ட ஆட்சியர் . விரைவில் டாஸ்மாக் கடையிலும் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கும் திட்டம் அமல்படுத்துவது குறித்துப் பரிசீலித்து வருகிறோம் என்றார் .

 

மாவட்ட ஆட்சியரின் ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் சங்கரன் , மாநகர நல அலுவலர் மணிவண்ணன் , இரண்டாவது மண்டல உதவி ஆணையர் மதிவாணன் ,  சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர் .