காங்கிரஸ் கட்சியில் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கிய வெற்றிவேல் , பின்னர் அதிமுகவில் இணைந்தார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பாகப் போட்டியிட்டு எம்.எல்.ஏ வானார். பின்னர் 2014 ஆம் ஆண்டு சிறை சென்று வந்த ஜெயலலிதா மீண்டும் போட்டியிடுவதற்காக சென்னை ஆர்.கே.நகர் தொகுதியை விட்டுக் கொடுத்து ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவரானார். இதையடுத்து 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அதிமுக இரண்டாகப் பிரிந்த போது, சசிகலா அணியை வெற்றிவேல் ஆதரித்தார். பின்னர் தினகரனுக்கு ஆதரவாக 18 எம்எல்ஏக்கள் பிரிந்த போது, அதில் வெற்றிவேலும் இடம் பெற்றிருந்தார். இதனால் எம்.எல்.ஏ பதவியிலிருந்து வெற்றிவேல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து அமமுகவுக்கு ஆதரவாக இருந்த வெற்றிவேலுக்கு அக்கட்சியின் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து சசிகலாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.
இந்நிலையில் , அவருக்குக் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வெற்றிவேலின் உடல் நிலை மோசமாகி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெற்றிவேல் கடந்த ஆண்டு சிகிச்சை பலனின்றி அக்டோபர் மாதம் காலமானார். இந்நிலையில் , வெற்றிவேல் மறைந்து ஒரு வருடம் ஆக உள்ள நிலையில் , சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள வெற்றிவேலின் வீட்டிற்கு சென்று குடும்பத்தாரை நேரில் சந்தித்து சசிகலா ஆறுதல் தெரிவித்தார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையான சசிகலா சமீபகாலமாக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளிடம் பேசி ஆடியோ வெளியிட்டு வந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதிமுகவின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நேரடியாக சென்று நலம் விசாரித்ததுடன் அவர் இறந்தபோது அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தநிலையில் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று ஓபிஎஸுக்கு ஆறுதல் கூறினார். அதிமுகவின் முன்னாள் அவைத்தலைவராக இருந்த புலமைப்பித்தன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்த நிலையில் அவரது குடும்பத்தினரை சந்தித்து நலமும் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது