நாளை (நவ.18) தொடங்கி மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
வடக்கு அந்தமான் கடலோரப் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல் சுழற்சியின் காரணமாக இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
இதனையொட்டி அனைத்து மண்டல இயக்குனர்களுக்கும் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆழ்கடல் மீன்பிடி படகுகளிலுள்ள மீனவர்கள் அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திக்கொள்ளுமாறும், நாளை முதல் 45 கி.மீ முதல் 65 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 20, 21ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வரும் நாள்களில் எங்கெங்கு மழை பெய்ய்மென நேற்று வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
18.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
19.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20.11.2022: கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.