ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்ப் போன்றவர்கள் அல்ல என்று கூறிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கேரள ஆளுநர் ஆரிப் கானின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார்.


ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல என்றும், லோக் ஆயுக்தா போன்ற அமைப்புகளை நீர்த்துப்போகச் செய்யாமல் பார்த்துக் கொள்வது அவர்களின் கடமை என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பதவி நீக்கம் செய்யும் மாநில லோக் ஆயுக்தாவின் அதிகாரத்தை நீக்கும் மசோதாவில் கையெழுத்திடாத கேரள கவர்னர் ஆரிப் முகமது கானின் நடவடிக்கையை அவர் மேலும் ஆதரித்தார். 






கேரள கவர்னர் மசோதாவில் கையெழுத்திட மறுத்ததற்கு காரணம் இருப்பதாக கூறிய அவர்,  லோக்ஆயுக்தா போன்ற அமைப்பு தோல்வியடையாமல் பார்த்துக் கொள்வது கவர்னர் உள்ளிட்ட அரசியல் சாசன அலுவலகங்களின் கடமை என்று ஆர்.என்.ரவி கூறினார்.


தமிழ்நாட்டில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அரசு பொது நலனுக்கான பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய நேரத்தில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


முன்னதாக அக்டோபர் மாதம், திமுக எம்.பி டி.ஆர்.பாலு, தமிழக ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி கையெழுத்திடுமாறு கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுத்தார். கையெழுத்திட்ட கோப்பு ராஷ்ட்ரபதி பவனில் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


அதேபோல் கேரள அரசுக்கும் அம்மாநில ஆளுநருக்கும் இடையேயான அதிகார போட்டி உச்சக்கட்டத்தை நிலையில், பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் கேரள உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 


கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை மாநில அரசு நியமித்திருந்தது. ஆனால், பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தன்னுடைய பொறுப்பு என ஆளுநர் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கேரள மீன்வளம் மற்றும் கடல் ஆய்வுப் பல்கலைக்கழகம், கண்ணூர் பல்கலைக்கழகம், ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருதப் பல்கலைக்கழகம், காலிகட் பல்கலைக்கழகம் மற்றும் துஞ்சத் எழுத்தச்சன் மலையாளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்கள், பதவியில் இருந்து விலக வேண்டும் என ஆளுநர் கெடு விதித்திருந்தார். 


இச்சூழலில், ஆளுநருக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் துணை வேந்தர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், நீதிமன்றம் இதுகுறித்து விசாரிக்கும் வரை உத்தரவிடக்கூடாது என ஆளுநருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இது போல் பல விஷயங்களில் ஆளுநருக்கும் கேரள அரசுக்கும்  மாறுபட்ட கருத்து நிலவி வருகிறது. 


 இதற்கிடையில், நவம்பர் மாதம், கேரள அரசு, கவர்னர் ஆரிப் முகமது கானை, கேரள கலாமண்டலம் பல்கலைக் கழகத்தின் வேந்தர் பதவியில் இருந்து நீக்கியது. இது போல் பல விஷயங்களில் முரண்பட்டு செயல்படுவது பரபரப்பை கிளப்பியுள்ளது.