விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் இன்று தமிழக வெற்றிக்கழக முதல் அரசியல் மாநாடு நடக்கிறது. 100 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியை விஜய் ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
த.வெ.க. மாநாடு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் கொள்கை விளக்கத் திருவிழாவாக நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்காக அவர் நாளை மதியம் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூர் பகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
கொடியேற்றும் விஜய்
பின்னர் அங்கிருந்து புறப்படும் விஜய், மாநாடு நடைபெறும் வி.சாலை பகுதிக்கு வருகிறார். அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள், ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். வரவேற்பை பெற்றுக்கொண்டு மாநாட்டு திடலை அடையும் நடிகர் விஜய், அங்குள்ள பிரதான வாயிலில், இடிதாங்கி வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடிக்கம்பத்தில் 20 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட கட்சி கொடியை ரிமோட் மூலம் ஏற்றி வைக்கிறார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு அவருக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள தனி வழிப்பாதை வழியாக மாநாட்டு மேடைக்கு செல்கிறார்.
இதற்காக மாநாட்டு திடலில் கிழக்கு திசை நோக்கியவாறு 60 அடி அகலத்திலும், 170 அடி நீளத்திலும், 30 அடி உயரத்திலும் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இம்மாநாடு வெற்றிக் கொள்கைத் திருவிழாவாக நடத்த இருப்பதால் அதனை குறிக்கும் வகையில் மேடையின் முன்பகுதியில் கட்சியின் கொடி, இரு யானைகளுடன் வரையப்பட்டு அதற்கு கீழே வெற்றிக் கொள்கைத் திருவிழா என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த மேடையில் தோன்றும் நடிகர் விஜய், அம்மேடையுடன் 12 அடி உயரத்திலும் 600 மீட்டர் நீளத்திலும் அமைக்கப்பட்டுள்ள ரேம்பில் (நடைபாதை) நடந்து சென்றவாறு மாநாட்டுத்திடலில் கூடியிருக்கும் தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்களை பார்த்து கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்துகிறார்.
ஆவலுடன் தவெக தொண்டர்கள்
அதைத்தொடர்ந்து மாநாடு தொடங்குகிறது. இதில் கட்சியின் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டு பேச உள்ளனர். அவர்கள் பேசி முடித்ததும் மாநாட்டின் நிறைவாக நடிகர் விஜய், அங்கு திரண்டிருக்கும் தொண்டர்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றுகிறார்.
இம்மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்கால கொள்கைகள், திட்டங்கள், எதிர்கால அரசியல் பயணம் குறித்து விஜய் பேச உள்ளார். விஜய்யின் பேச்சை கேட்கவும், அவர் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப் போகிறார் என்பதை அறியவும் அவரது நெஞ்சில் குடியிருக்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். அதுமட்டுமின்றி இம்மாநாட்டை ஒட்டுமொத்த தமிழக மக்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் உற்றுநோக்கியுள்ளதால் மாநாடு தனிச்சிறப்பையும், மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கம்பீரமாக தவெக பறக்கும் கொடிகள்
இம்மாநாட்டுக்கான ஒவ்வொரு பணிகளையும் வெவ்வேறு தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு கடந்த 3 வாரங்களாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு, பகல் பாராமல் மாநாட்டுப் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டனர். இப்பணிகள் அனைத்தையும் நேற்று இரவுடன் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் முடித்து தமிழக வெற்றிக் கழகத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இம்மாநாட்டு திடலானது 85 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மாநாட்டுக்காக செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு பணிகளும் அனைவரின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்துள்ளது. அந்த விதத்தில் மாநாட்டு வளாகத்திற்குள் செல்வதற்கு 5 வழிகளும், வெளியே வருவதற்கு 15 வழிப்பாதைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநாட்டின் முகப்பு வாயிலில் இருந்து மாநாட்டு திடல் வரும் வரை வழியில் இருபுறமும் மற்றும் மாநாட்டு திடலை சுற்றிலும் 600-க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்களில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிகள் கம்பீரமாக பறக்க விடப்பட்டுள்ளன.
புனித ஜார்ஜ் கோட்டை வடிவில்
மாநாட்டு திடலின் பிரதான நுழைவுவாயில், தமிழக அரசின் தலைமை செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை போன்று மஞ்சள் நிறத்தில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு தமிழக அரசின் தலைமை செயலகம் என்ற விளம்பர பதாகையும் வைத்துள்ளனர்.
அதில் கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள 2 யானைகள் இருபுறமும் பிளிறுவது போன்று நுழைவுவாயிலில் அலங்கார அமைப்பு ஏற்படுத்தியுள்ளனர். அதன் அருகிலேயே மாநாட்டுக்கு வரும் தொண்டர்களை வரவேற்கும் விதமாக விஜய், வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் இருப்பது போன்ற பிரமாண்ட கட்-அவுட் வைத்துள்ளனர்.
திடலை அலங்கரிக்கும் கட்-அவுட்டுகள்
மாநாட்டு திடலை மேலும் அலங்கரிக்கும் வகையில் மேடையின் இடதுபுறத்தில் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், சட்டமேதை டாக்டர் அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட தியாகிகளான வேலு நாச்சியார், கடலூரை சேர்ந்த அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட்-அவுட்டுகளும் அந்த கட்-அவுட்களுடன் விஜய்யின் கட்-அவுட்டும் இடம்பெற்றுள்ளன. அதேபோல் மேடையின் வலதுபுறத்தில் தமிழ் அன்னை, சேர, சோழ, பாண்டியர்கள் ஆகியோரின் கட்-அவுட்டுகளுடன் விஜய்யின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் மாநாட்டில் அதிகளவு தொண்டர்கள் கூடுவதால் தொழில்நுட்ப சாதனங்கள் இயங்குவதற்கு ஏற்ற வகையில் தற்காலிகமாக செல்போன் கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாநாட்டு நிகழ்வை வெகுதொலைவில் இருந்து காணும் வகையில் மாநாட்டு திடலின் பிரதான இடங்களில் பெரிய அளவிலான டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாகன நிறுத்தங்கள்
மாநாட்டுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்த 207 ஏக்கர் பரப்பளவில் 4 இடங்களில் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள், 350 நடமாடும் கழிவறைகள் ஆகியவை மாநாட்டு திடலின் முக்கிய பகுதிகளிலும், மாநாட்டு திடலுக்கு வெளியே பிரதான இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டின் பாதுகாப்பு கருதியும், மாநாடு நடைபெறும் பகுதியை முழுமையாக கண்காணிக்கும் வகையிலும் 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரவை பகலாக்கும் வகையில் மாநாட்டு திடல் முழுவதும் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடங்களிலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
75 ஆயிரம் இருக்கைகள்
மாநாட்டு திடலை ஒவ்வொரு பகுதியாக பிரித்து அவற்றில் 1,500 பேர் அமரும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஆண்கள், பெண்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் என தனித்தனியாக அமருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு முதலில் வருபவர்கள் நாற்காலிகளில் அமர்ந்தும், மற்றவர்கள் நின்றும் மாநாட்டு நிகழ்வை காண ஏற்பாடு செய்து வருகின்றனர். அந்த வகையில் மாநாட்டு திடலில் பச்சை நிறத்தினால் ஆன தரை விரிப்புகள் போட்டு அதில் 75 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
விழாக்கோலம் பூண்டுள்ளது
இம்மாநாட்டை வாழ்த்தும் வகையிலும், நடிகர் விஜய்யை வரவேற்றும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே விளம்பர பதாகைகள், கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர மாநாட்டை திரும்பிப் பார்க்கும் வகையிலும், திருச்சி மார்க்கத்தில் இருந்து வருபவர்களுக்கு, மாநாடு நடைபெறும் இடம் இன்னும் சற்றுத்தொலைவில் இருப்பதை உணர்த்தும் வகையிலும் வி.சாலை பகுதிக்கு அருகில் உள்ள முண்டியம்பாக்கம், பாப்பனப்பட்டு உள்ளிட்ட இடங்களில் 60 அடி உயரத்தில் விஜய் புகைப்படத்துடன் மாநாடு தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்ட ராட்சத பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டுள்ளன.
இதுவரை பல்வேறு அரசியல் கட்சியினர் நடத்தியுள்ள மாநாட்டையே மிஞ்சும் வகையில் விஜய்யின் மாநாட்டுக்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இம்மாநாடுக்கு பிறகு தமிழக அரசியலில் புதியதொரு மாற்றம் ஏற்படலாம் என்று தமிழக மக்கள் மட்டுமின்றி அரசியல் நோக்கர்கள் பலரும் கருதுகின்றனர்.
மாநாட்டு திடலில் 6 கேரவன்கள்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் சினிமா நடிகர்கள், நடிகைகளும் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் அழைப்பு கொடுக்காவிட்டாலும் அவர் என்ன பேசப்போகிறார் என்பதை அறிய ஒரு பார்வையாளராக சென்று அம்மாநாட்டில் கலந்துகொள்வோம் என்று ஏற்கனவே நடிகர்கள் விஷால், ஜீவா அறிவித்திருந்தனர். எனவே இம்மாாநாட்டில் சினிமா பிரபலங்களும் பங்கேற்கக்கூடும் என தெரிகிறது. அவ்வாறு அவர்கள் வரும்பட்சத்தில் அவர்களின் வசதிக்காக மாநாட்டுக்குழுவினர், 6 கேரவன்களை கொண்டு வந்து தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
மாநாட்டு திடலை குடும்பம், குடும்பமாக பார்த்துச் சென்ற மக்கள்
விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டுக்காக பிரமாண்டமான முறையில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் குடும்பம், குடும்பமாக சென்று மாநாட்டு திடலை பார்வையிட்டுச் சென்ற வண்ணம் உள்ளனர். அதுமட்டுமின்றி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்லும் மக்கள், சாலையோரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் சென்று மாநாட்டு திடலையும், அங்கு பறக்கும் கொடி தோரணங்கள் மற்றும் மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் கட்-அவுட்டுகளையும் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். மேலும் அவர்கள் மாநாட்டு திடலின் முன்பு நின்று செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். மாநாட்டில் பங்கேற்க முடியாவிட்டாலும், செல்லும் வழியில் விஜய் பங்கேற்க இருக்கும் மாநாட்டுத் திடலை பார்வையிட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக அவர்கள் கூறினர்.
தொண்டர்களுக்கு வழங்க 5 லட்சம் ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகள் தயார்
விஜய் மாநாட்டில் சுமார் 5 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டுக்கு வரும் அவர்களுக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட், 50 கிராம் மிக்சர், ½ லிட்டர் தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இதற்காக அவற்றை மாநாடு நடைபெறும் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மொத்தமாக கொண்டு வரப்பட்டு அங்கு ஒரு பையில் போட்டு பேக்கிங் செய்யும் பணிகள் நடந்தன. இவை அனைத்தும் தொண்டர்களுக்கு வழங்கியதுபோக மேலும் தேவைப்பட்டால் விழுப்புரம், புதுச்சேரியில் உள்ள கடைகளில் இருந்து பேக்கிங் செய்து வரவழைக்கவும் அக்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
பாதுகாப்பு பணியில் 4,500 போலீசார்
தமிழக வெற்றிக்கழக மாநாட்டையொட்டி வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகார்க் மேற்பார்வையில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷாமித்தல் தலைமையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் உள்ளிட்ட 10 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 15 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 50 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 150 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசாரும் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஆயுதப்படை போலீசார், ஊர்காவல் படையினர் என சுமார் 4,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் வி.சாலை பகுதியில் உள்ள இ.எஸ். நர்சிங் கல்லூரியில் காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து மாநாட்டு நிகழ்வுகள் முழுவதுமாக போலீசார் கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
மாநாடு வெற்றிபெற வேண்டி கோவிலில் வழிபாடு
தமிழக வெற்றிக்கழக மாநாடு வெகு சிறப்பாக நடைபெறவும், மாநாடு வெற்றி பெற வேண்டியும் நேற்று அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள், மாநாட்டு திடல் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் அதன் அருகில் உள்ள 27 அடி உயரமுள்ள அச்சுத ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் வழிபாடு முடிந்ததும் அப்பகுதி மக்களுக்கு குளிர்பானங்கள், வாழைப்பழங்கள் ஆகியவற்றை புஸ்சி ஆனந்த் வழங்கினார்.
உதவும் மையங்கள்
மாநாட்டுக்கு வருபவர்கள் யாராவது வழிதவறி வேறு பகுதிக்கு சென்று விட்டாலோ அல்லது காணாமல் போனாலோ அவர்களை கண்டுபிடித்து தரும் வகையிலும், காணாமல் போனவர்களை அணுகுவதற்கும் மிஸ்சிங் ஜோன் என்கிற உதவும் மையங்கள் (Missing center) மாநாட்டு திடல் பகுதிகளிலும் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.
17 முகாம்களில் 350 பேர் அடங்கிய மருத்துவக்குழுவினர் தயார்
மாநாட்டின்போது தொண்டர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் மாநாட்டு திடலில் 17 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் அமரும் பகுதியில் 5 முகாம்களும், ஆண்கள் அமரும் பகுதியில் 5 முகாம்களும் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் 7 முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 150 டாக்டர்கள், 150 செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என 350 பேர் அடங்கிய மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள, போதிய மருத்துவ உபகரணங்களுடனும், 22 ஆம்புலன்ஸ் வாகனங்களுடனும் பணியில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.