மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பிரிவில் பயன்படுத்தக்கூடிய சிறிய வகை ரயில் இன்ஜின் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

மேட்டூரில் ஒரே வளாகத்தில் இரண்டு அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. அதில் முதலாம் அனல் மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின்சாரம் நான்கு யூனிட்டில் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மற்றொன்றில் 600 மெகாவாட் மின்சாரம் ஒரு யூனிட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது.

 

மின்சார உற்பத்திக்காக நிலக்கரிகளை  ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல சிறிய வகை ரயில்  பயன்படுத்தப்படுகிறது. நிலக்கரியை எடுத்துச் செல்லும் சிறிய வகை ரயில் இன்ஜினில் இன்று திடீரென தீப்பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் அனல் மின் நிலைய தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அனல்மின் நிலைய  தீயணைப்புத் துறையினர் தீயணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஒரு மணிநேரமாக பற்றி எரிந்த தீயால் கரும்புகை வானத்தைத் தொடும் அளவிற்கு எழுந்தது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அனல் மின் நிலைய தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேட்டூர் அனல்மின் நிலையத்தில் கடந்த மாதம்தான் நிலக்கரி தாங்கிச்செல்லும் கன்வேயர் பெல்ட் தீப்பற்றி இருந்து மிகுந்த சேதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.