Fire Accident: தமிழகம்-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் ஏற்பட்ட பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பட்டாசு கடையில் தீ விபத்து:
ஓசூர் அடுத்த தமிழக மாநில எல்லையான ஜூஜூவாடியிலிருந்து சில மீட்டர்கள் தூரத்தில் கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளி சோதனை சாவடி அருகே நவீன் என்கிற தனியார் நிறுவன ஊழியர் பாலாஜி கிராக்கர்ஸ் என்ற ஒரு பட்டாசு கடையை சில ஆண்டுகளாக நடத்தி வந்திருக்கிறார். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலும் 2 கடைகளையும் நவீன் நடத்தி வந்துள்ளார். இங்கு அரூர், கள்ளக்குறிச்சி, வாணியம்பாடி ஆகிய பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்கள் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், ஒரு கண்டெய்னர் லாரி மற்றும் 2 மினி லாரிகளில் பட்டாசுகள் கடைக்கு வந்தது.
13 பேர் உயிரிழப்பு:
அப்போது, பட்டாசுகளை இறக்கி வைக்கும்போது திடீரென தீ பிடித்தது. சிறிது நேரத்திற்குள் தீ மளமளவென பரவியது. இந்த தீ விபத்தில் முதலில் 6 பேர் உயிரிழந்தனர். தற்போதைய நிலவரப்படி, தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 என தெரியவந்துள்ளது. மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 5 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் இன்று மாலை 3.15 மணியளவில் நடந்துள்ளது.
இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. மேலும், சம்பவ நடந்த இடத்தில் அத்திப்பள்ளி தீயணைப்பு வாகனங்கள் மூன்று மணிநேரமாக போராடி தீயை அணைத்துள்ளனர். தற்போது, தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் கடையில் உள்ள ரூ.1.05 கோடி மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறியதில், அங்கிருந்த லாரி, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்தன.
லாரியில் வந்து பட்டாசுகளை இறக்கும்போது மின்கம்பி உரசி தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியது. இதனையடுத்து, பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், கர்நாடக மாநில அத்திப்பள்ளி போலீசாரும், ஓசூர் சிப்காட் போலீசாரும் போக்குவரத்தை சரி செய்தனர். இதனை அடுத்து, போக்குவரத்தில் இயல்பு நிலை ஏற்பட்டது. பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் 13 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பொது நிவாரண நிதியில் ரூ.3 லட்சம், கடுமையான காயம் ஏற்பட்ட நபர்களுக்கு ரூ.1 லட்சம், லேசான காயத்திற்கு ரூ.50 ஆயிரம் என வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : Cauvery Issue: காவிரி விவகாரம்...தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம்...முதல்வர் ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!