Cauvery Issue: காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.


தீராத பிரச்னை:


தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயத்திற்கான தண்ணீரை தர கர்நாடகா மறுப்பது என்பது தொடர்கதையாகி வருகிறது. நமக்கான உரிமையையே ஒவ்வொரு முறையும் காவிரி மேலாண்மை ஆணையத்தையும், உச்சநீதிமன்றத்தையும் நாடி தான் பெற வேண்டியதாக உள்ளது. இந்த முறையும் கூட சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு தரவில்லை. அதன்பிறகு, தமிழ்நாடு அரசின் பல்வேறு முயற்சிகளால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் அதனை கர்நாடக அரசு திடீரென குறைத்தது.


காவிரி ஆணைய உத்தரவுப்படி செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 15 வரை தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், தண்ணீரின் அளவு குறைந்துவிட்டதாக கர்நாடக அரசு கூறியது. இதனால், காவிரி நீர் விவகாரத்தில் இருமாநிலங்களுக்கும் இடையேயான பிரச்னை பூதாகரமாக வெடித்தது.  இதற்கிடையில், காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டதை அடுத்து, கர்நாடகா முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது.


வறட்சியில் மேட்டூர் அணை:


இப்படி இருக்கையில், மறுபுறம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்து இன்று 154 கனஅடி என்ற அளவுக்கு வந்துவிட்டது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் மற்றும் நீர் இருப்பும் வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,004 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 334 கன அடியாக இருந்தது.


இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 154 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 32.25 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 8.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. மேட்டூர் அணை வற்ட்சியை சந்தித்துள்ளதால் நாளை முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் நாளை முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சட்டப்பேரவையில் தீர்மானம்:




இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை மறுநாள் (அக்டோபர் 9) கூடுகிறது. அதில், காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை கூடிய முதல் நாளிலேயே முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ”தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா  விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்" என்று தீர்மானத்தை முன்மொழிய உள்ளார் முதல்வர் ஸ்டாலின். நாளை மறுநாள் சட்டப்பேரவை கூடியதும், அனைத்து கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.