தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் டெல்லி செய்தியாளர்களிடம் பேசியதாக கூறி 26 நொடிகள் கொண்ட ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோவில், ஆட்சிக்கு வந்த கடந்த ஒரு வருடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், முதலமைச்சர் முக ஸ்டாலின் மருமகன் சபரீசனும் இணைந்து 30 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளனர். இந்த குறிப்பிட்ட தொகையை இவர்களின் மூதாதையர்கள் கூட சம்பாதிக்கவில்லை. இவ்வளவு பெரிய தொகையை இவர்கள் இருவரும் எப்படி கையாள போகிறார்கள் என்று பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது

Continues below advertisement

இந்தநிலையில், ”அது என்னுடைய வாய்ஸ் இல்லை, இந்த ஆடியோ ஒரு மோசடி. ஆடியோ வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பி.டி.ஆர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இருக்கும் பொறுப்புகளுக்கிடையே, சோஷியல் மீடியாக்களின் மண் வாரித் தூற்றப்படும் விஷயங்களுக்கு பதிலளிக்க நேரமிருப்பதில்லை. எனக்கு அளிக்கப்பட்டுள்ள வேலையில் சிறப்பான முறையில் கவனம் செலுத்துவதே ஒரு பொது ஊழியனாக எனக்கு சரியாக இருக்கும் என நான் நம்புகிறேன். 

Continues below advertisement

பேச்சு சுதந்திரத்தை பெருமளவில் ஆதரிப்பவன் நான். இதன் காரணமாகவே என்னை நோக்கி வரும் தனிப்பட்ட தாக்குதல்களின் மீது காவல்துறை புகார்களை அளிப்பதில்லை. என் முன்னோர்களைப் பற்றிய அவதூறு செய்யப்பட்ட ஒரே விஷயத்தில் மட்டும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவைப்பதற்கான முயற்சியை எடுத்திருக்கிறேன்.

கடந்த 2 வருடங்களில் என்னைப் பற்றி ஏராளமான அவதூறுகள் பரப்பப்பட்டுள்ளன. ஆதிக்கத்தை செலுத்தும் நபர் என்னும் சிறு அவதூறில் இருந்து, ஒரு ஃபைலுக்கு ஒரு பர்சண்ட் பெறுபவன் என்னும் மோசமான தீவிர அவதூறுகள் வரை பரப்பப்பட்டுள்ளன. கடமையைச் செய்வதே பதில் என்னும் வகையில் அவற்றுக்கு நான் பதிலளிக்காமல் இருந்து வந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “முதலில், என்னை வில்லனாக காட்ட முயற்சித்து வந்தார்கள். இப்போது தனியாக போராடுபவனாகவும், உண்மைகளை வெளிக்கொண்டுவரும் விசில்-பவுலராகவும் சித்தரிக்க நினைக்கிறார்கள். நான் பொது வெளியில் என்னவாக இருக்கிறேனோ, அதற்குக் காரணம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்தான். என்னையும் அவரையும் இதன்மூலம் பிரிக்க நினைக்கும் யுக்தி வெற்றியடையாது.

பத்திரிக்கைகளும் போலியான இந்த மூன்றாம் நபர் தகவல்களை வெளியிடுவதால் வருத்தமடைகிறேன்.

இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டு இத்துடன் முடிக்க நினைக்கிறேன்.

1. போலியான ஆடியோக்களைத் தயாரிக்கும் இந்த திறனுடன், மேலும் மோசமான ஆடியோ வீடியோ கிளிப்புகள் வெளிவரலாம்.

2. பொறுப்பான அரசியல்வாதிகளும், பத்திரிக்கை, தொலைக்காட்சிகளும் சரியான தரவுகளுடன் அவற்றை பிரசுரிக்கவும், வெளியிட்டுப் பேசவும் வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதுகுறித்து நான் வெளியிடும் கடைசி அறிக்கை இதுவாகத்தான் இருக்கும். இந்த பொய்களுக்கும், ஏமாற்று வேலைக்கும் என் சட்ட நடவடிக்கையே மேலும் பிரபல்யம் அளிக்கும் என்பது தெரிந்தும், சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சூழலுக்குத் தள்ளப்படுகிறேன். சட்ட நடவடிக்கையின் மூலம் இதற்கு தீர்வு கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்