தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளையறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.
வெள்ளை அறிக்கை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டியில், ”சிவகங்கையில் ஆண்டுதோறும் தண்ணீர் இல்லை என விவசாயிகள் போராட்டம் செய்கின்றனர். இதை திருத்தி அனைவருக்கும் நீர் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. எச்.ராஜா தேர்தல் உள்ளிட்ட பல வகைகளில் தோல்வி அடைந்தவர். நிதி அமைச்சர் தியாகராஜன், விவசாயிகளை திருடர்கள் என்று கூறியதால் அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என எச்.ராஜா கூறுகிறார். சாப்பாடு போட்ட கைக்கு, சிவகங்கை விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர் எச்.ராஜா. இது மாதிரி நிறைய பேர் உள்ளனர்." என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, கோயில்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் விவகாரத்தில் ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் குறித்து தொடர்ந்து பல்வேறு கருத்துகளைத் தனது ட்விட்டர் வலைத்தளத்தில் முன்வைத்து வந்தார் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். அவரது பதில்கள் சர்ச்சையானதை அடுத்து இந்த விவகாரத்தில் தான் மேலதிகமாக எதுவும் பேசப்போவதில்லை என அறிக்கை விடுத்தார் அவர். இதற்கிடையே அவரது பூர்வீகத்தை குறித்தெல்லாம் கேள்வி எழுப்பினார்கள் சத்குரு ஆதரவாளர்கள் சிலர். இவர்களில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா தன் பங்குக்கு, ‘பிடிஆர் வாயை மூடவேண்டும் இல்லையென்றால் அவருடைய பூர்வீகத்தைப் பற்றிய உண்மையெல்லாம் பேச நேரிடும்’ எனக் கருத்துக் கூறியிருந்தார். கால்பந்து வலைக்கு வலை உதைக்கப்படுவதைப் போல ஒருவரை ஒருவர் மாறி மாறி இந்த விவகாரத்தில் சாடி வந்த நிலையில் ஹெச் ராஜாவின் இந்த விமர்சனத்துக்குத் தனது முகநூல் பக்கத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இன்று காலை, கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று காலை 11.30 மணிக்கு வெளியிட்டார். 120 பக்கங்களைக் கொண்ட வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தாக்கல் செய்தார். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி செய்த நிலையில் திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டது. வருவாய் இழப்பிற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. மேலும், கடன் விவரங்கள், குடிநீர், மின்வாரியம், போக்குவரத்து துறையின் வரவு - செலவு மற்றும் வருவாய் இழப்புக்கான காரணங்கள் உள்ளிட்டவை வெள்ளையறிக்கையில் இடம்பெற்றுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2001இல் அதிமுக ஆட்சியில் பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் பொன்னையன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.