அரசு ஊழியர்களுக்கான நிலுவைத்தொகையை விடுவிக்க தனக்கு மனமில்லை என தவறான வதந்தியை பரப்பி வருவதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 



சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர விடுதியில் வளர்ந்து வரும் அரசியல் தலைவர்களுக்கான தலைமை பண்பு, அரசு கொள்கை புரிதல், திட்டமிடுதல் மற்றும் செயல்திட்டம் குறித்து தலைவா என்ற தலைப்பில் மூன்று நாள் கருத்தரங்கை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்து உரையாற்றினார். 


நிகழ்ச்சியில் பேசிய அவர், ”எனக்கு அரசியல் முன் அனுபவம் இல்லாமல் 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது முதல் முறையாக வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன். தொடர்ந்து, இரண்டாவது முறையாக மீண்டும் 2021 ஆம் ஆண்டு தேர்தலில்  வாய்ப்பு வழங்கப்பட்டதிலும் வெற்றி பெற்றேன். இதில் முதல் முறையாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நிதியமைச்சர்கள் மிக மூத்த தலைவர்களாக இருக்கும்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனக்கு இந்த பொறுப்பை வழங்கியுள்ளார். அதில் சிறப்பாக செயலாற்ற வேண்டியது எனது கடமை” என தெரிவித்தார்.  


தொடர்ந்து பேசிய அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ”தற்போதைய காலகட்டத்தில் அரசியல் வேகமாக மாறி வருகிறது. இளைஞர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் மாநில உரிமை, ஜி.எஸ்.டி தொடர்பாக நான் பேசுவது குறைவு தான். ஆனால் இதே கருத்தை குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது அதிகமாக பேசினார். அவர் பேசியதை விட 50% குறைவாக தான் நாங்கள் பேசியுள்ளோம். ஹரியானா போன்ற வடமாநிலங்களில் உள்ள மக்களையும் மேம்படுத்த வேண்டும். தமிழக சகோதர சகோதரிகளும் மேம்பட வேண்டும் என்பது தான் என் நிலைபாடு” என கூறினார். 


அதேசமயம், “தமிழகத்தில் நிதிச்சுமை அதிகமாக உள்ளதால் அதனை சரி செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கும் நிதியில் பெரும் பங்கு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கே செலவாகிறது. குறைந்த நிதி மட்டுமே வளர்ச்சி பணிகளுக்காக செலவாகிறது. இதனால்  அரசு துறைகளால் லாபம் ஈட்டுவதற்கு சிரரமாக உள்ளது. இதனை புரிந்துகொள்ளமாமல் ஜாக்டோ ஜியோ போன்ற அரசு ஊழியர்கள் நிலுவைத்தொகையை விடுவிக்க மனமில்லை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.


ஊக்கத்தொகை வேண்டும், ஊதிய உயர்வு வேண்டும் என வலியுறுத்தி வருவதோடு, முதலமைச்சர் நல்லவர், அவருக்கு செய்ய மனமிருக்கிறது. ஆனால், நிதியமைச்சர் தான் நிதி வழங்க மறுக்கிறார் என என் மீது தவறான வதந்தியை பரப்பி வருகின்றனர்” என பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வருத்தம் தெரிவித்தார்.அதேபோல் ”அரசியலில் தலைவர்களுக்கு மனிதநேயம், செயல்மிறன் மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். இவை இரண்டும் இருந்தால் மட்டுமே மக்களை சந்திக்க முடியும். 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் 6 மாதத்திற்கு ஒருமுறை என்ன செய்தேன் என வீடுவீடாக சென்று பிரசுரம் வழங்கியவன் நான்” எனவும் அவர் பெருமையாக கூறினார்.