நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் இலங்கைக்கு மிக அருகில் உள்ளது.  இதனால் அப்பகுதிகளில்  இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கஞ்சா, சமையல் மஞ்சள், கடல் அட்டை, பீடி இலை, கடல் குதிரை, விவசாய உரங்கள் உள்ளிட்டவை கடல் வழியாகக் கடத்தப்படுவது அதிகரித்து உள்ளது.


இலங்கைக்கு கடத்தல்:




அதேபோல் இலங்கையிலிருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக தங்க கட்டிகள் தமிழகத்துக்குள் கடத்தி வரப்படுகின்றன. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காகவும், இதில் ஈடுபடக் கூடிய நபர்களை கைது செய்யவும் இந்திய கடற்படை, கடலோர காவல்படை, மாவட்ட காவல்துறை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கடத்தலில் ஈடுபடும் நபர்கள் அவ்வப்போது கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகி உள்ளது. அந்த வகையில் தான், ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு உரம் கடத்த முயன்ற 2 பேர் பிடிபட்டுள்ளனர்.


இதுதொடர்பாக கடலோர பாதுகாப்பு குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 28ம் தேதியன்று இரவு மண்டபம் கடலோர பாதுகாப்பு  குழும காவலர்கள்  மண்டபம் வேதாளை கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 தண்ணீர் கேன்களில் சந்தேகத்திற்கிடமான, வெள்ளை நிற பவுடர் 394 கிலோ எடையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 


விவசாய உரம்: 


இதையடுத்து காரில் இருந்த சர்பராஸ் நவாஸ் மற்றும் ஜெய்னுதீன் ஆகியோர் சந்தேகத்திற்கு இடமான பொருளை இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் இருந்ததால், அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும மண்டபம் கடற்காவல் ஆய்வாளர்களால் விசாரிக்கப்பட்டார்கள். அவர்கள் கொண்டு வந்த பவுடர் போதைபொருளே அல்லது வெடிமருந்தோ இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது. மேற்படி நபர்கள் விவசாய உரத்தினை மிக அதிக பணமதிப்பிற்காக இலங்கைக்கு அனுப்ப இருந்தது தெரிய வந்தது.


இந்த செயல் சுங்கத்துறை சட்டமீறலின் கீழ், வருவதால் மேற்படி இருநபர்கள், அவர்கள் கொண்டு வந்த  பொருட்களுடன் சட்டப்படி உரிய மேல் நடவடிக்கைகாக மண்டபம் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என, கடலோர பாதுகாப்பு குழுமம் தெரிவித்துள்ளது.