ராமேஸ்வரத்தில் இருந்து தண்ணீர் கேன்களில் உயர்ரக போதைப்பொருள் பவுடரை இலங்கைக்கு கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் உலா வந்தன. இந்நிலையில், கடத்தலில் தி.மு.க. கவுன்சிலருக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்று தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சில ஊடகங்களில் வெளியான செய்திகளையும், அதை குறிப்பிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் வெளியிட்ட ட்வீட் பதிவையும் பகிர்ந்து திமுக மாணவர் அணி தலைவர் ஆர்.ராஜீவ்காந்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
ராஜீவ்காந்தி ட்வீட்:
கடலோரப் பாதுகாப்புக் குழுமம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நாங்கள் சந்தேகத்திற்கிடமான பொருளை இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் இருந்ததால், அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும மண்டபம் கடற்காவல் நிலைய உதவி ஆய்வாளரால் விசாரிக்கப்பட்டார்கள்.
மேலும், அவர்கள் கொண்டு வந்த பவுடர் போதை பொருளோ அல்லது வெடிமருந்தோ இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. மேற்படி நபர்கள் விவசாய உரத்தினை மிக அதிக பணமதிப்பிற்காக இலங்கைக்கு அனுப்பவிருந்தது தெரியவந்தது. இருப்பினும், இந்தச் செயல் சுங்கத் துறை சட்ட மீறலின்கீழ் வருவதால் மேற்படி இரு நபர்கள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களுடன் சட்டப்படி உரிய மேல் நடவடிக்கைக்காக மண்டபம் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் ராஜீவ் காந்தி அந்த ட்வீட்டில் பகிர்ந்துள்ளார்.
ராஜீவ்காந்தி தனது ட்விட்டரில் "அண்ணாமலை இப்படித்தான் உங்கள் பொழப்பு பொய்யிலே நடக்குது.." என்று பதிவிட்டுள்ளார்.
போதை பவுடர்:
ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் இரவு கடலோர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, அந்த காரில் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 தண்ணீர் கேன்கள் இருந்தன. அந்த கேன்களிலும் வெள்ளை நிற பவுடர் நிரப்பப்பட்டு இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த கேன்களை திறந்து அதில் இருந்த பவுடரை எடுத்து சோதனை செய்ததில், அது போதை பவுடர் என தெரியவந்தது. இதையடுத்து, அந்த போதை பவுடரை காரில் ஏற்றி வந்த கீழக்கரை சங்கிலி தெருவை சேர்ந்த நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஜெய்னுதீன் (45) மற்றும் அவரது தம்பி கவுன்சிலர் சப்ராஸ் நவாஸ்(42) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கரூரில் செல்போன் நிறுவனம் ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு
300 கோடி மதிப்பு:
மேலும், போதை பவுடர் கேன்கள் மற்றும் அதனை ஏற்றி வந்த ஆடம்பர காரை பறிமுதல் செய்தனர். பிடிப்பட்ட போதை பொருள் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பேசிய போலீசார், தண்ணீர் கேன்களில் நிரப்பி கொண்டு வந்தது, கொக்கேன் ரக போதை பவுடராக இருக்கலாம் என தெரியவருகிறது. இதன் மதிப்பு ரூ.300 கோடி இருக்கும். இலங்கைக்கு கடத்துவதற்காக நூதன முறையில் தண்ணீர் கேன்களில் அடைத்து வேதாளை கடற்கரை பகுதிக்கு காரில் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்த கடத்தல் முயற்சியில் தொடர்புடைய மேலும் சிலரை தேடிவருவதாகவும், இலங்கையில் யாருக்கு அனுப்பி வைக்க இருந்தார்கள் என்பது தொடர்பான தகவல்கள் விரைவில் தெரியவரும் என கூறினர். மேலும், குஜராத் மாநிலத்தில் இருந்து உரம் என்று சென்னை வழியாக கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.