வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியது. நேற்றே புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மாலை ஃபெஞ்சல் புயல் உருவானது. இந்த புயல் காரணமாகவே கடந்த சில தினங்களாகவே தமிழ்நாட்டில் மழை அதிகமாக பெய்து வருகிறது.

ஃபெஞ்சல் புயல்:


குறிப்பாக, சென்னையில் கடந்த சில நாட்களாக குளிர்காற்றுடன் மழை பெய்து வருகிறது, புயல் நாளை மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் நாளை வரை சென்னையில் மழை அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மேயர் பிரியா கூறியிருப்பதாவது, “ சென்னை மாநகராட்சி சார்பாக வரக்கூடிய புயலாக இருந்தாலும் சரி, பருவமழையாக இருந்தாலும் சரி எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.


தயார்:


துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மாநகராட்சி சார்பாக எடுத்துக் கொண்டுள்ள பணிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100 எச்.பி. திறன் கொண்ட 110 மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருந்தது.


இப்போது கூடுதலாக 60 மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல, அனைத்து கால்வாய்களும் கண்காணிப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் சேரும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். வரக்கூடிய மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தயாராக உள்ளோம்.


மாநகராட்சியை பொறுத்தவரை 22 ஆயிரம் பணியாளர்கள் பணியில் உள்ளனர். மழைக்காலத்திற்காகவே கூடுதலாக வார்டுகளுக்கு கூடுதலாக 10 நபர்கள் நியமிக்கப்படுவார்கள். தன்னார்வலர்கள், என்.ஜி.ஓ.க்களுடன் அக்டோபர் மாதமே இணைந்து செயல்பட்டு வருகிறோம். “


இவ்வாறு அவர் கூறினார்.


முன்னெச்சரிக்கையில் தமிழ்நாடு அரசு:


ஃபெங்கல் புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மழை அதிகமாக காணப்படும் பகுதிகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் தயாராக உள்ளனர். பாம்பனில் 3ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.  தூத்துக்குடியிலும் 3ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ள நிலையில், சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 6ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.


கடந்தாண்டு மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த பெருமழை காரணமாக சென்னை தத்தளித்தது. சென்னையின் பல பகுதிகளிலும் மழைநீர் ஒரு வாரத்திற்கும் மேலாக தேங்கி நின்றது. இது ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்த மழை, புயல் எச்சரிக்கையின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது தமிழ்நாடு அரசு.


ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை மட்டுமின்றி டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.