கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்தது, பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரி கொண்டு ரிப்பன் மாதிரி வெட்டியது என சர்ச்சைகளில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான் மீது இன்னும் தமிழ்நாடு சுகாதாரத்துறையோ, காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவே, ஒரு சாமானியன் இதுபோன்று ஒரு சம்பவத்தை செய்திருந்தால் இந்நேரம் அவனை உரித்து உப்புக்கண்டம் போட்டிருப்பார்கள். ஏன் இர்ஃபானுக்கு மட்டும் இந்த சலுகை ? அவர் அரசு அதிகாரியா ? அமைச்சரா ? இல்லை அதற்கும் மேலா ? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.


இந்திய சட்டத்திற்கு எதிராக சென்ற இர்ஃபான்


கடந்த மே 19ஆம் தேதி தனக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை இந்திய சட்டத்திற்கு எதிராக கண்டறிந்து யூடியூபில் வெளியிட்டார் இர்ஃபான். அதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு எதிர்ப்பும் கண்டனமும் எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் இது தவறான முன்னுதாரணமாகிவிடும் என மருத்துவர்கள் தரப்பிலேயே வலியுறுத்தப்பட்டது. ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை


மன்னிப்பே போதுமானது என்ற அமைச்சர்


அவர் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தது இந்தியா இல்லை என்பதாலும் அவர் துபாய் நாட்டிலேயே கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்ததாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்றும் இருப்பினும் விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸ்க்கு அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார், அதுவே போதுமானது என அறிவித்தார் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்


ரிப்பன் வெட்டுவதுபோல் தொப்புள் கொடியை வெட்டிய இர்ஃபான்


அந்த சர்ச்சை ஓய்வதற்குள் இன்னொரு தவறை செய்தார் இர்ஃபான். சென்னையில் அவரது மனைவிக்கு பிரசவம் நடக்கும்போது அருகே இருந்து பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை மருத்துவமனையில் மருத்துவர்கள் முன்னிலையில் ரிப்பன் வெட்டுவது மாதிரி கத்தரியால் வெட்டினார் இர்ஃபான். அதோடு, தன்னுடைய வியூக்காக அதையும் தன்னுடைய யூடுபில் பகிர்ந்தார். இதற்கு முன்னரை விட மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்தது. சமுக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம் உள்ளிட்டோர் இர்ஃபான் செய்தது சட்ப்படி குற்றம், குற்றவியல் சட்டங்களின் கீழ் அவர் தண்டிக்கப்பட வேண்டியவர் என்று கொந்தளித்தார்கள்.


மீண்டும் மா.சு.விடம் கேள்வி கேட்ட செய்தியாளர்கள் – நடவடிக்கை என்ற அமைச்சர்.


இந்நிலையில், மீண்டும் பத்திரிகையாளர் சந்திப்பில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இந்த விவகாரம் குறித்து கேட்டதற்கு, இந்த முறை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என்றார், பின்னர், அவர் மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றால், அதன்பிறகும் நடவடிக்கை எடுக்காதது குறித்து கேட்டப்போது அவர் என்ன கொலையா செய்துவிட்டார் ? இது ஒன்றும் பெரிய குற்றமல்ல என மாற்றிப் பேசினார்.


காவதுறையில் சுகாதாரத்துறை சார்பிலேயே புகார் கொடுக்கப்பட்டும் இதுவரை இர்ஃபான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு துறை புகார் கொடுத்தே காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், சாமானியன் புகார் கொடுத்தால், காவல்துறை அதிகாரிகள் எப்படி விரைவாக செயல்பட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்ற கேள்வியும் இதனூடே சேர்ந்து மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.


நடவடிக்கை எடுக்காதது ஏன் ?


இர்ஃபானுக்கு திமுகவின் முக்கிய நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதால், அவர்களின் அதிகாரத்தை தாண்டி சுகாதாரத்துறையாலோ, காவல்துறையாலோ நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும், கொஞ்ச நாளில் இதை மக்கள் மறுந்துவிடுவார்கள் என்பதால், இதை பெரிதுப்படுத்தி பேச வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தரப்புக்கு இர்ஃபானுக்கு ஆதரவளிக்கும் நண்பர் தரப்பில் இருந்து அறிவுறுத்தல் வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்காரணமாகவே, இர்ஃபான் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது.


தந்தைகள் எல்லாம் இனி குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை போடலாமா ?


இந்நிலையில், எல்லோருக்கும் தனக்கு பிறக்கும் முதல் குழந்தை குறித்து பெரிய ஆர்வமும் ஆசையும் இருக்கும். அப்படி பிரசவத்தின்போது தனக்கு பிறக்கும் முதல் குழந்தைக்கு மற்ற தந்தைகளும் தொப்புள் கொடியை வெட்டும் ஆசை வந்து, அதனையும் அவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டால் தமிழக சுகாதாரத்துறை இதேபோன்று, இது ஒரு பெரிய தப்பு இல்லை என்று சொல்லி கடந்து போகுமா ? அல்லது அவர்கள் எல்லாம் சாமானியர்கள்தானே என்ற நினைப்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி பல தந்தைகளுக்கு இப்போது எழுந்துள்ளது.


மருத்துவர்கள் இன்றி இன்று தொப்புள் கொடியை வெட்டலாம் என்றால் நாளை பிரசவமே மருத்துவர்கள் துணையின்றி பார்த்துக்கொள்ளலாம் என்ற ஆசை தந்தைகளுக்கு வந்தால் அது எவ்வளவு பெரிய ஆபத்தில்போய் முடியும் என்பதை உணர்ந்து இர்பான் மீது நடவடிக்கை எடுத்து இதுபோன்ற ஆர்வக்கோளாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.