ஆட்டோக்களில் தொடரும் கட்டண கொள்ளை.
கரூரில் பெரும்பாலான ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். கரூர் மாவட்டத்தில் 900-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களும், 40க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோகளும் பதிவு செய்யப்பட்டுள்ளனர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயக்கப்படும் ஆட்டோக்களில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட பல மடங்கு கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.
குறிப்பாக, இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு 15 ரூபாய் கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கும் குறைவாக உள்ள ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை பல ஆட்டோ டிரைவர்கள் வசூல் செய்கின்றனர்.
குறைந்தபட்ச கட்டணம் என்பது 80 ரூபாய் என ஆட்டோ டிரைவர்களே நிர்ணயம் செய்துள்ளதால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கரூரில் ஓடும் பெரும்பாலான ஆட்டோக்களில் மீட்டர் இல்லை. இருந்தாலும் அதை பயன்படுத்துவதில்லை. 80 ரூபாய்க்கு குறைவாக எந்த ஆட்டோ டிரைவரும் ஆட்டோவை இயக்குவது இல்லை. வெளியூர்களில் உள்ள, ஆட்டோ ஸ்டாண்டுகளில், கட்டணம் குறித்த போர்டுகள் இல்லை. அரசின் அனைத்து விதிமுறைகளும் மீறப்படுகின்றன. பெண்கள், குழந்தைகள் என்றும் பாராமல் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கின்றனர். இரவு நேரத்தில், மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.
கேரளா மாநிலத்தில் உள்ளது போல ஆட்டோகளுக்கு நியாயமான கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஆட்டோகளில் கட்டணம் வசூலிப்பது, மோட்டார் பொருத்துவது, ஆட்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் சென்னை உயர்நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால் கரூரில் அனைத்து உத்தரவுகளும் காற்றில் பறக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர். சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களை விட கரூரில் ஆட்டோ கட்டணம் பல மடங்கு அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.