கொண்டாட்டங்களின்போது முகக்கவசம் அணிந்து கொரோனா கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  சென்னை சைதப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், கொரோனா பாதிப்புடன் சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய் மற்றும் மகள் இருவரும் தீவிர கண்காணிப்பில் தனிமையில் வைக்கப்பட்டு இருக்கின்றனர். இருவரும் நலமாக உள்ளனர். மேலும், கொண்டாட்டங்களின்போது முகக்கவசம் அணிவது அவசியம். முகக்கவசம் அணிவது என்பது சுயக்கட்டுப்பாடு. தற்போது பரவத் தொடங்கியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது. எனவே பொது மக்கள் கவனமுடன் இருக்க வேண்டுகோள் வைக்கின்றேன். 


ஒன்றிய அரசு தடுப்பூசி விநியோகத்தையும், தடுப்பூசி உற்பத்தியையும் நிறுத்திவிட்டது. தமிழ்நாட்டில் 3 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் உள்ளன. இதில், 2 லட்சத்து 70 ஆயிரம் கோவேக்‌ஷின் தடுப்பூசிகளும், 40 ஆயிரம் கோவிட் - ஷீல்டும் கையிருப்பில் உள்ளன. மேலும், 60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய் உள்ளவர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களில் 60 சதவீதத்தினருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும். 


மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து தனியார் மருத்துவமனைகளில் ரூபாய் 800 செலுத்தி போட்டுக்கொள்ளவேண்டும் என்பதை ஊடகங்கள் வாயிலாகத் தான் நான் தெரிந்துகொண்டேன். இருப்பினும், தமிழ்நாடு முதலமைச்சர் வாயிலாக மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.   






உலகில் பரவும் கொரோனா:


சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவலானது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


இன்னும் சில நாட்களில் புத்தாண்டு வரவுள்ள நிலையில், மக்கள் பல இடங்களில் கூட்டமாக கூடுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், பல மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.


கொரோனா தொற்றானது, கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கி உலகம் முழுவதும் பரவியது. உருமாறிய கொரோனா  வைரஸ் (  BF.7 வகை  ) இந்தியாவிலும் பரவி தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


ஏற்கனவே கொரோனா முதல் அலை இரண்டாவது அலை என புரட்டி எடுத்ததைப் போலவே, அடுத்த கொரோனா அலையாக, உருமாறிய கொரோனா பரவலும் சீனாவில் அதிகரித்து வருகிறது. இதனால் சீனாவின் மருத்துவமனைகளில் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சீனாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக இந்த உருமாறிய வைரஸ் தொற்றால், வயதில் முதிர்ந்தவர்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.