ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகளை வேளாண் கல்லூரிகள் உருவாக்கி வருகிறது என்றால் ஆச்சரியமாகதானே இருக்கிறது. நம்பித்தான் ஆகவேண்டும். ஏனென்றால், அதுதான் உண்மை. அக்ரி குருப் என்றாலே அலட்சியமாக பார்த்தவர்களையெல்லாம் கொஞ்சம் அன்னாந்து பார்க்க வைத்திருக்கிறது தமிழ்நாட்டில் உள்ள வேளாண் கல்லூரிகள். இங்கு அக்ரி படித்த பலர், ‘அசால்டாக’ ஐ.ஏ.எஸ். ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, தமிழ்நாட்டின் முக்கிய பதவிகளில் இருக்கின்றனர்.
பயிர் செய்வது, களையெடுப்பது, தண்ணீர் பாய்ச்சுவது என்று தாங்கள் கற்ற கள பாடத்தை, காவல்துறையிலும், நிர்வாகத் துறையிலும் நிரூபித்து வருகின்றனர் விவசாயத்தை முதன்மையாக எடுத்து படித்தவர்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டின் தலைமைச்செயலாளராக இப்போது நியமிக்கப்பட்டிருக்கிற இறையன்பு, கோவை வேளாண் கல்லூரியில் அக்ரி படித்தவர்தான். ஏன், இதற்கு முன்பு தலைமைச் செயலாளராக இருந்த சண்முகம் கூட இதே கல்லூரியில் அக்ரி படித்துவிட்டு, ஐஏஎஸ் ஆனவர்தான்.
இவர்கள் மட்டுமில்லை, தற்போது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டிருக்கிற சைலேந்திரபாபு கூட கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்தான். இங்கு அக்ரி படிக்கும்போதுதான், இவருக்கு ஐ.பி.எஸ் ஆகவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. சண்முகம் போன்றவர்கள் ஐ.ஏ.எஸ் தேர்வெழுதி வெற்றி பெற்றது சைலேந்திரபாவுவிற்கு கூடுதல் ஊக்கத்தை கொடுத்தது. அதன்பிறகுதான், ஐபிஎஸ் தேர்வெழுதி வென்று போலீஸ் அதிகாரி ஆனார் சைலேந்திரபாபு.
இவரைப்போன்றே, ஏடிஜிபி ஜெயந்த் முரளி, காவல்துறை தலைமையக ஏடிஜிபி லோகநாதன், பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி தினகரன் உள்ளிட்டோரும் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்பு செயலர் செந்தில்குமார், செய்தித்துறை மற்றும் தமிழ்நாடு கேபிள் டிவி கழகத்தின் இயக்குநராக உள்ள ஜெயசீலன் ஆகிய இருவரும் மதுரை வேளாண் கல்லூரியில் பட்டம் பெற்ற பின் ஐ.ஏ.எஸ் ஆனவர்கள். அதேபோல், தமிழ்நாடு காவல்துறையின் நிர்வாகப்பிரிவு ஏடிஜிபியாக உள்ள ரவி, மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் ஆகியோரும் இதே மதுரை வேளாண் கல்லூரியில் வேளாண்மை படித்தவர்கள். அதேபோல், தெற்கு மண்டல ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ள அன்புவும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அக்ரி படித்துவிட்டு, ஐபிஎஸ் ஆனவர்தான்.
பொதுவாக, 10ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்து, முக்கியமான எந்த பிரிவுமே கிடைக்காமல், ஹிஸ்டிரியும், அக்ரியும் படித்து, ‘அராத்து’ என்று பெயர் வாங்கும் மாணவர்களைதான் பெரிவாரியான பேருக்கு தெரியும். ஆனால், மண்ணை புரட்டி போட்டு விவசாயம் செய்வதுபோல், வரலாற்றின் பக்கங்களை புரட்டிப்போட்டு வரலாறு படைத்தவர்களில் பெரும்பாலோனோர் இதே ஹிஸ்டிரியும் அக்ரியும் படித்தவர்கள்தான். அதற்கான எளிய சான்றுகள்தான் மேலே குறிப்பிட்டுள்ள நபர்கள். எளிதில் எட்டிவிட முடியாத ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளை எழுதி ‘அசால்டு’ செய்த இந்த ஆளுமைகள் அக்ரி மாணவர்களுக்கான ஆகாயம்..!