நீட் தேர்வுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலுக்கு எதிராக நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராய தமிழக அரசு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு தடை விதிக்க கோரி பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழக அரசு தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், விளம்பர நோக்கத்துடனும், அரசியல் பிரமுகர் என்ற அடிப்படையில் மட்டுமே கரு.நாகராஜன் வழக்கு தொடர்ந்துள்ளதாக தமிழக அரசு தனது பதில் மனுவில் தெரிவித்திருந்தது. இதனிடையே திமுக, மதிமுக, விசிக மற்றும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் இந்த வழக்கில் இடையீட்டு மனுவாக தங்கள் மனுவை எடுத்துக் கொள்ளவும், கரு.நாகராஜனின் வழக்கை தள்ளுபடி செய்யவேண்டியும் கோரிக்கை விடுத்திருந்தனர்.


இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்றைய தினமும் விசாரணைக்கு வந்தது. இந்த அனைத்து மனுக்களும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதுவரை இந்த வழக்கில் மத்திய அரசு எந்த பதிலையும் அளிக்காததால் ஜூலை 8-ஆம் தேதி வரை மத்திய அரசுக்கு அவகாசத்தை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால் ஜூலை 13-ஆம் தேதி விரிவான விசாரணை நடைபெறும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.