தமிழகத்தில் 10ஆண்டுகளுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் தலைமையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு இம்மாத இறுதியில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என எதிர்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்த பிறகு துறைசார் மானியக் கோரிக்கைகளுக்காக 30 நாட்கள் வரை சட்டப்பேரவை நடைபெறலாம் என எதிர்க்கப்படும் நிலையில் தலைமை செயலகத்தில் இன்று சட்டப்பேரவை விதிகள் குழுவின் ஆலோசனை கூட்டம் பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் நடைப்பெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேரவை தலைவர் அப்பாவு, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்ய சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசித்ததாக கூறினார். வரலாற்று சிறப்புமிக்க இ பட்ஜெட், காகிதமில்லா பட்ஜெட் குறித்து பேசியிருக்கிறோம். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சி அளித்து, படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறிய சபாநாயகர் அப்பாவு. ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது ஜெய்ஹிந்த் விவகாரம் குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது குறித்த கேள்விக்கு ஜெய்ஹிந்த் சட்டப்பேரவையில் பேசப்பட்ட விவகாரம், பொதுவெளியில் விவாதிக்க வேண்டியதில்லை என பதிலளித்தார். வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்ய ஆலோசித்து வருவதாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
மேலும் பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முன் தொடுதிரை வைப்பது, உறுப்பினர்களுக்கு டேப்லெட் மற்றும் கையடக்க கணிணி வழங்குவது குறித்து ஆலோசித்ததாகவும், உறுப்பினர்கள் அனைவரும் இந்த முன்னெடுப்புக்கு ஆதரவளித்ததாக தெரிவித்தார்.நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்ப சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தெரிவித்த அவர், முதற்கட்டமாக வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் படிப்படியாக மற்ற தொழில்நுட்ப வசதிகளையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கொரோனா பரவல் காரணமாக வரலாற்றில் முதன்முறையாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதி 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்டாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.