vijaykanth Death: கோயம்பேட்டில் நடிகர் விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த விஜயை நோக்கி, ”வெளியே போ” என சிலர் முழக்கமிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
விஜய் நேரில் அஞ்சலி:
உடல்நிலை பாதிப்பு காரணமாக நேற்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரைத்துறை பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும், தேமுதிக கட்சி தொண்டர்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவகத்தில் வைக்கப்பட்டிருந்த, விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் நேற்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது விஜயகாந்த் உடல் வைத்திருக்கும் கண்ணாடி பேழை மீது கை வைத்து உயிரற்ற விஜயகாந்த் உடலை பார்த்த விஜய் கண்ணீர் விட்டார். சில வினாடிகளின் அஞ்சலிக்கு பிறகு பிரேமலதாவை பார்த்த விஜய் அவரது கரங்களை பிடித்து ஆறுதல் கூறினார். கிளம்பும்போது, சில விநாடிகள் நின்று மனமுடைந்து விஜயகாந்தின் முகத்தை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.
விஜய்க்கு எதிர்ப்பா?
இதனிடயே, விஜயகாந்த் உடல் அருகே நின்று விஜய் அஞ்சலி செலுத்தும்போது, அவர் அங்கிருந்து வெளியே செல்ல வேண்டும் என சிலர் முழக்கங்களை எழுப்பினர். ”வெளியே போ, வெளியே போ” தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதுதொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜயகாந்த் நலமுடன் இருக்கும்போது வந்த பார்க்கவில்லை, இப்போது ஏன் வந்தீர்கள் என்று அவரது ரசிகர்கள் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. ஆனால், மதுபோதையில் அங்கு கூடியிருந்த சிலர் தான், விஜய்க்கு எதிராக முழக்கங்களை எழுப்பியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விஜய் - விஜயகாந்த் திரை உறவு:
நடிகர் விஜயகாந்த் உடன் சில படங்களில் விஜய் நடித்துள்ளார். அதில் ‘செந்தூரப்பாண்டி’ படத்தை குறிப்பிட்டு சொல்லலாம். செந்தூரப்பாண்டி படத்தில் நடித்த பிறகு விஜய்யின் திரை வாழ்க்கை உச்சத்தை அடைய தொடங்கியது. விஜயகாந்த் மூலமே தனதுக்கு சினிமாவில் முன்னேற வாய்ப்பு கிடைத்ததாக நேர்க்காணல் ஒன்றில் விஜய் பேசி இருப்பார். விஜய்க்கு முன்னாடி, அவரது தந்தையும் இயக்குநருமாக எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய்க்கு நல்ல நண்பர். சட்டம் ஒரு இருட்டறை உள்ளிட்ட எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய பல படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார். இந்த சூழலில் மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.