தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறுஅறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், கேரளா, தமிழ்நாடு, கர்நாடக உள்ளிட்ட தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால், அந்தந்த மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தவதற்காக சில கட்டுப்பாடுகளுடன் கடந்த 20-ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் நாளை நள்ளிரவு வரை அறிவிக்கப்பட்டிருந்தது.




இந்நிலையில், தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறுஅறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றை தடுக்க ஏற்கெனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மறு அறிவிப்பு வரை தொடரும் என்று தெரிவித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று முழு ஊரடங்கு இருந்தாலும், வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்டோருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்று கூறியுள்ளது. சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.


பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் கோயில் பணியாளர் மட்டும் கலந்துகொண்டு குடமுழுக்கு விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கிலும் மெட்ரோ ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


தமிழ்நாட்டில் நேற்று தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 17 ஆயிரத்தை நெருங்கியது குறிப்பிடத்தக்கது.