தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 59 நபர்கள் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 64 ஆயிரத்து 350 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்து 267 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் மொத்தமாக 27 ஆயிரத்து 43 நபர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கையும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இதுவரை தமிழகம் முழுவதும் 14 லட்சத்து 3 ஆயிரத்து 52 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று 364 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 




கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், எதிர்கால பாதுகாப்பாக தடுப்பூசியைத் தான் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முன்களப்பணியாளர்கள், 45வயதுக்கு மேற்பட்டவர்கள் என தடுப்பூசி செலுத்த மக்கள் வகைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 3 மாதத்துக்குள் 5 கோடி பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை வைத்துள்ள தமிழக அரசு தடுப்பூசி தட்டுப்பாட்டாலும் சுணக்கம் காண்கிறது. 5 கோடி தடுப்பூசிகளுக்கு டெண்டரும் கோரப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் தமிழகத்திலேயே தடுப்பூசி தயாரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் நேற்று அறிவித்தார். அந்த அறிவிப்பில் குறைந்த பட்சம் ரூ.50 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்கள் அரசுடன் கூட்டு வைத்து ஆலைகளை நிறுவலாம் எனவும், இதற்காக இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் விருப்பங்கள் கோரப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தடுப்பூசி தற்காலிக இடைக்கால தேவையாகவே இருக்கும் நிலையில் அதற்கென தனி ஆலை, உற்பத்தி என்பது சாத்தியப்படுமா? அவசர தேவைக்காக ஒரு எதிர்கால திட்டத்தை உருவாக்குவது சரியா? என ஒருதரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். அதேவேளையில் இது ஒரு புதிய தொழில்துறையின் தொடக்கம் என்றும், நமக்கான தேவை பின்னர் ஏற்றுமதி என தடுப்பூசி உற்பத்தி ஒரு பயோ பார்க்கை உருவாக்கும் என ஒருதரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். 




இது குறித்து தன்னுடைய கருத்தை சன் நியூஸ் விவாத நிகழ்ச்சியில் பதிவிட்ட கனவு  தமிழ்நாடு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம், ‛2000ம் ஆண்டு மென்பொருள் துறையில் மிகப்பெரிய பிரச்னை ஏற்பட்டது. அந்த பிரச்னைதான் தமிழகத்தில் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனங்கள் முளைக்கக் காரணமாகின. அதனால் இன்று சாப்ட்வேர் துறையில் தமிழகம் முன்னோடியாக இருக்கிறது. அதேபோல இந்த கொரோனாவால் பிரச்னை ஒருபுறம் என்றாலும், இது மருத்துவம் சார்ந்த துறையில் இது மிகப்பெரிய உற்பத்தி திறனை உருவாக்க வழிவகுக்கும். சார்ட்வேர் டெக் நிறுவனங்கள் போல, பயோ நிறுவனங்கள் உருவாகும். 




ஏனென்றால் தடுப்பூசியை மையமாக வைத்து தமிழகத்தில் மட்டுமே ரூ.5ஆயிரம் கோடிக்கு வியாபார சந்தை உள்ளது. இந்திய அளவில் ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கும், உலக அளவில் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு வியாபார சந்தை உள்ளது. தமிழகம் மாதிரியான முன்மாதிரி மாநிலங்கள் உற்பத்தியை உருவாக்கி பின் தங்கிய மாநிலங்களுக்கு உதவலாம். மருத்துவம் சார்ந்த பயோ டெக் படிப்புகளை முடித்த பட்டதாரிகளும் தமிழகத்தில் கைவசம் உள்ளனர். கொரோனா என்பது தற்காலிகம் என்றாலும், இதனைக்கடந்தும் மருத்துவத்துறையில் ஒரு புரட்சி ஏற்படும். அதற்கு தமிழகம் முன்மாதிரியாக இருக்கும். தற்போதைய தேவை என்பதைக் கடந்து உற்பத்தி, ஏற்றுமதி என்ற நிலைக்குச் செல்ல இது உதவும் என தெரிவித்தார். அதேவேளையில் மாநில அரசின் இந்த முயற்சிக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை உரிய காலத்துக்குள் செய்துகொடுக்க வேண்டியதும் கட்டாயம் எனக் குறிப்பிட்டுள்ளார்.