திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், முதல்வர் மு.க.ஸ்டாலின் கூடுதல் தடுப்பூசிகள் கேட்டும், ஆக்சிஜன் தரக்கோரியும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் “ஒன்றிய அரசு” என்றே குறிப்பிட்டு வருகிறார். அதேபோல், தேசிய கல்விக் கொள்கை தொடர்பான மத்திய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை தமிழ்நாடு புறக்கணித்தது, தடுப்பூசி, ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகளை தமிழகமே தயாரித்துக்கொள்ள முடிவு எடுத்தது என தொடரும் தமிழக அரசின் செயல்பாடுகள் மாநில சுயாட்சிக்கு வலு கூட்டக்கூடியதாக இருக்கிறதா ? அல்லது மத்திய அரசை உரசும் விதமாக இருக்கிறதா என்பது குறித்து தன்னாட்சி தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன் மற்றும் பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம. ஸ்ரீனிவாசன் ஆகியோரிடம் கேட்டோம். இனி இவர்கள் பகிர்ந்த கருத்துகள் இங்கே :-


 



  • ஆழி செந்தில்நாதன், ஒருங்கிணைப்பாளர், தன்னாட்சி தமிழகம்



முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த செயல்பாடுகள், இந்திய அரசியல் அமைப்புக்கு உட்பட்ட செயல்பாடுகள்தான். இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படையில் இதனை ஒன்றிய அரசு என்று சொல்வதே மிகச்சரியானது. Indian Constitutional ல Union Government ஒன்றிய அரசு என்றுதான் சொல்லியிருக்கிறதே தவிர, ஒரு இடத்திலும் Central Government என சொல்லவில்லை. மத்திய அரசு என்ற சொல்லே மாநில உரிமைகளுக்கு எதிரானதுதான். இதை பழகிவிட்டோம் என்பதனாலேயே எல்லா இடங்களிலும் நாம் இதை சொல்கிறோம். ஆனால் மத்திய அரசு என்று ஒன்று கிடையவே கிடையாது. சட்டப்படி ஒன்றிய அரசு தான் இருக்கிறது.


Union Government, State Government இதுதான் இந்திய அரசியல் சாசனத்தில் இருக்கக் கூடிய பெயர்கள். இதை சொல்வது எந்த விதத்தில் தவறாக முடியும் ? இரண்டாவது, ஒரு மாநிலம் தனக்கு தேவையான விஷயங்களை நிறைவேற்றிக்கொள்வது – தடுப்பூசிகளை இறக்குமதி செய்வது, குறிப்பிட்ட பொருட்களை வெளிநாட்டில் இருந்துகூட வாங்குவது போன்ற எல்லா அதிகாரமும் மாநில அரசுக்கு இருக்கிறது. அதை செய்யும் போது ஏற்றுமதி, இறக்குமதி அல்லது வெளிநாடுகளுடன் உள்ள உறவின் அடிப்படையில் உள்ள ஒன்றிய அரசின் விதிமுறைகளை மாநில அரசு மீறினால் மட்டும்தான் அது தவறு. அதேபோல், தடுப்பூசியை மத்திய அரசுதான் வாங்க வேண்டும், மாநில அரசு வாங்கக் கூடாது, உற்பத்தி செய்துக்கொள்ள கூடாது என்று எந்த சட்டமும் சொல்லவில்லை. அப்படி ஒரு சட்டம் இருந்தால் அதை Challenge ம் பண்ணமுடியும்.


மத்திய அரசின் அமைச்சரோ அல்லது அதிகாரியோ பேசுவதையெல்லாம் மாநிலங்கள் வேதவாக்காக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. மத்திய அரசின் நிலைபாடுகள் குறித்து எத்தனையோ முறை உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. அதற்காக உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு எதிரானது என கூறமுடியுமா ?


எனவே, தமிழ்நாடு அரசு எடுக்கக் கூடிய எல்லா முடிவுகளும் பலத்த யோசனைகள், சட்ட ஆலோசனைகளுக்கு பிறகே எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு சின்ன இடத்தில் கூட பிரச்னை வரக்கூடாது என்று ரொம்ப Carefull ஆக செய்கிறார்கள். அப்படி இருக்கும் போது மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகள் என்பது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இருக்க கூடிய செயல்பாடுகள்தான். இதில் எந்த தவறும் இல்லை.


தேசிய கல்விக் கொள்கை தொடர்பான மத்திய அமைச்சரின் ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெளிவாகவே சொல்லியிருக்கிறார். இருந்தாலும், ஒரு ஒன்றிய அமைச்சர் மாநில அமைச்சரிடம் பேசாமல், அங்கு இருக்கக் கூடிய அதிகாரிகளிடம் நேரடியாக பேசுவது சரியில்லை. மாநில முதல்வர்கள், அமைச்சர்களை தாண்டி, அதிகாரிகளுடன் பேசுவதன் மூலமாக இந்தியா முழுவதும் ஒரே நிர்வாகம் (Single Administration) என்ற அமைப்பை உருவாக்க பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. தொடர்ச்சியாக ஒன்றிய அரசு இந்த முன்னெடுப்பை எடுத்து வருகிறது. அதை தவறு என்று உறுதியாக சுட்டிக்காட்டக் கூடிய உரிமையும் கடமையும் மாநில அரசுகளுக்கு உள்ளது.


தேர்தெடுக்கப்பட்ட அரசின் பிரதிநிதிகளாக இருக்கும் அமைச்சர்களிடம் பேசுங்கள் என்று அன்பில் மகேஷ் கேட்பது எந்த விதத்தில் தவறு என்பதை மத்திய அரசு சொல்ல வேண்டும். கல்வி என்பது இன்று பொதுப்பட்டியலில் இருக்கிறது. ஒன்றிய அரசும் சட்டம் இயற்றலாம் அதனை நடைமுறைப்படுத்தலாம், மாநில அரசும் சட்டம் இயற்றலாம், நடைமுறைப்படுத்தலாம் என சொல்லும்போது இரு தரப்புக்குமே சட்டம் சமமான இடத்தைதான் கொடுத்திருக்கிறது. இது மேலே, அது கீழே என எந்த சட்டமும் சொல்லவில்லை.  அப்போ நீங்க நடத்தும் மீட்டிங் குறித்து நாங்கள் கேள்வி எழுப்புவதில் என்ன தவறு ?


ஒரு ஒன்றிய அரசின் அமைச்சரோ அல்லது அதிகாரியோ அவர்களுடைய எல்லைக்குள்தான். பொதுப்பட்டியல் என வரும்போது மாநிலத்தின் கருத்துகளை அவர்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும். நீங்க எங்ககிட்ட பேசுங்க எதற்கு அதிகாரிகள் கிட்ட பேசுறீங்க என அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்கிறார் என்றால் முழுக்க முழுக்க அரசியலமைப்பு படி சரியான கேள்விதான் அது.


கொள்கை முடிவை அரசு எடுக்கிறதா, இல்லை அதிகாரிகள் எடுக்கிறார்களா? இந்த கேள்வி மிகவும் முக்கியமானது அமைச்சர் தான், தான் நிர்வகிக்கும் துறை மீதான கொள்கை முடிவை எடுக்க முடியும். ஏனென்றால் அவர்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பிரதிநி, அதிகாரி என்பவர் Executive. அரசு, அமைச்சர்கள் எடுக்கும் முடிவை செயல்படுத்துவதுதான் அவர்களுடைய வேலை. ஆனால், அதிகாரிகள் மட்டத்தில் அவர்கள் இடையே ஒரு கூட்டம் நடைபெறுகிறது என்றால் அதில் கலந்துகொள்ளலாம். ஆனால் கொள்கை முடிவு எடுக்கக் கூடிய இடத்தில் ஒன்றிய அமைச்சர் ஒருவர் பங்கேற்று பேசுகிறார் என்றால், இங்கு மாநில அமைச்சர்தான் பங்கேற்க வேண்டும்.


இந்த முறைகளை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு மீறுவது என்பதுதான் அரசியல் சாசனத்திற்கு எதிரானது ; தமிழ்நாடு அரசு செய்வது நூற்றுக்கு நூற்று ஒரு சதவீதம் அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட நடவடிக்கைகளே, என்றார்.


 



  • இராம. ஸ்ரீனிவாசன், மாநில பொதுச்செயலாளர், பாஜக



முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசு என குறிப்பிட்டு பிரதமருக்கு கடிதம் எழுதுவதால் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஏனென்றால் ஒன்றிய அரசு என்பது நாம் அரசியலமைப்பு சட்டத்தில் பயன்படுத்தும் வார்த்தைதான். இது ஒன்றும் மு.க.ஸ்டாலின் புதிதாக கண்டுபிடித்த வார்த்தை இல்லை. இதை நாங்கள் ஒன்றும் பிரச்னைக்குரிய வார்த்தையாக பார்க்கவில்லை.  ஏழு நாட்கள் என்றாலும், ஒரு வாரம் என்று சொன்னாலும் எப்படி ஒரு பொருள் தருகிறதோ அப்படிதான் ஒன்றிய அரசு என்றாலும், மத்திய அரசு என்றாலும் ஒரே பொருள்தான் தரும்.


மத்திய அரசு, மைய அரசு என்பது சமஸ்கிருத சொல் என்பதால், சிலர் நடுவண் அரசு என்று தூய தமிழில் சொல்வார்கள். மு.க.ஸ்டாலின் ஒன்றியம் என பயன்படுத்துகிறார். இதில் அவர்தான் தெளிவு பெற வேண்டும். ஒன்றியம், ஒன்றியம் என்று சொன்னால் இன்று தமிழ்நாட்டில் நிறைய ஊராட்சி ஒன்றியங்கள் இருக்கின்றன. ஏதோ பஞ்சாயத்து ஒன்றியத்து கடிதம் எழுதுகிறார் ஸ்டாலின் என மக்கள் தவறாக புரிந்துக்கொள்ளப்போகிறார்கள். நிறைய ஒன்றிய செயலாளர்கள் வேறு திமுகவில் இருக்கிறார்கள். இதனால் திமுகவில் வேண்டுமானால் குழப்பம் வருமே தவிர, பாஜகவுக்கு எந்த குழப்பமும் இல்லை.


அதேபோல், ஒரு பொறுப்புள்ள மாநில அரசாங்கம் தடுப்பூசி, ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முயற்சித்திருப்பது வரவேற்கத்தக்கதுதான். அதேநேரத்தில் திமுக அரசு ஒன்றை தெளிவுப்படுத்தவேண்டும்; மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரெம்டெசிவிர் மருந்து என்பது ஒன்றுமில்லை, அது வெறும் தண்ணி மாதிரிதான்னு சொல்றாரு. இப்படி சொல்லிவிட்டு ரெம்டெசிவீர் மருந்தை போதிய அளவில் எங்களுக்கு தரவில்லை என்று மத்திய அரசை பார்த்து குறை சொல்லக் கூடாது. போதிய அளவு தடுப்பூசி கொடுக்கவில்லை என்றும் குற்றம் சொல்கின்றனர். என்ன, தடுப்பூசி வச்சுக்கிட்டேவா மத்திய அரசு இல்லன்னு சொல்றாங்க ? கோடிக்கணக்கான தடுப்பூசிகளை கையில் வைத்துக்கொண்டு தமிழ்நாட்டிற்கு தர மறுக்கிறார்கள் என்று சொன்னால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், தடுப்பூசிகள் குறித்த சந்தேகங்களை கிளப்பியதே இங்குள்ள எதிர்க்கட்சிகள்தான். தமிழ்நாட்ல மட்டும் 5 லட்சம் டோஸ் தடுப்பூசி வேஸ்டா போயிருக்கு சார், இதுக்கு யார் பொறுப்பு ? மத்திய அரசு தடுப்பூசி கொடுக்கலன்னு சொல்றீங்க, அவங்க கொடுத்த தடுப்பூசில 5 லட்சம் டோஸ் வீணா போனதற்கு யாருங்க பொறுப்பு ?


ஒவ்வொரு மாநிலத்தின் தேவை, எவ்வளவு பேர் தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள் என்பதையெல்லாம் கணக்கிட்டுதான் மத்திய அரசு தடுப்பூசிகளை விநியோகித்து வருகிறது. ஆனால் இங்கு முன்கள பணியாளர்களே முக்கால்வாசி பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லையே ?


கொரோனா காலத்தை கருத்தில்கொண்டு, ஊரடங்கு சூழலை கவனத்தில் வைத்து வரக்கூடிய கல்வி ஆண்டில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு நடைமுறை விவாதத்தை தான் மத்திய கல்வித் துறை அமைச்சர் நடத்தினாரே தவிர, இது ஒன்றும் கொள்கை முடிவு எடுப்பதற்கான கூட்டம் அல்ல. எல்லா மாநிலங்களில் இருந்தும் அவர்கள் அதிகாரிகளைதான் அழைத்திருக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் அமைச்சர்களை கூப்பிட்டுவிட்டு, தமிழ்நாட்டில் மட்டும் அதிகாரிகளை கூப்பிட்டிருந்தார்கள் என்றால் அவர்கள் வருத்தப்படலாம். அதனால், தமிழக அரசு இந்த கூட்டத்தை புறக்கணித்தது ஏற்புடையது அல்ல. இவர்களை விட தீவிரமாக மத்திய அரசை எதிர்க்கும் கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட், மேற்கு வங்காளத்தில் திரிணாமூல், காங்கிரஸ் ஆட்சி செய்கிறா மாநிலங்களின் கல்வி செயலாளர்கள் எல்லாம் இதில் கலந்துகொண்டிருக்கிறார்கள். யாருமே இதை புறக்கணிக்கவில்லை. ஆனால் திமுக அரசு இந்த கூட்டத்தை புறக்கணித்து, மத்திய அரசுடன் ஒரு மோதல் போக்கை வரவேற்கும் கட்சிபோலதான் நடந்துகொண்டிருக்கிறது. இதெல்லாம் மாநில சுயாட்சியா ? மாநில சுயாட்சி என்றால் என்ன, இந்தியாவை விட்டு பிரிஞ்சு இன்னொரு நாட்டோடு போய் சேர்ந்துக்கொள்வதா ? இல்ல தனி நாடு என அறிவிக்கிறதா ? எதுங்க மாநில சுயாட்சி, இந்தியாக்குள்ள இருக்கிறதுதான, அண்ணா என்ன சொன்னார் “வீடு இருந்தால்தானே கூரை மாற்ற முடியும்” என்றார். சீன போர் வரும்போது ஓடு மாத்துறத பத்தி பேசுறோம், வீடு இருந்தால்தானே ஓடு மாத்த முடியும்னு சொன்னாரு. அதேபோல, இந்தியா இருந்தால்தானே சார் மாநில சுயாட்சி. இந்தியா அப்டிங்கிற ஒரு தேசத்தையே ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றால் மாநில சுயாட்சி எங்கிருந்து வரும் ?  திமுக ஆட்சியில்தான் கல்வி பொதுப்பட்டியலுக்கு போச்சு நீங்கதான் தூக்கிக் கொடுத்தீங்க, அப்போ எங்கே போச்சு உங்க மாநில சுயாட்சி ? திமுக ஆட்சியில தான் கச்சத்தீவை தூக்கி இந்திராகாந்தி இலங்கைக்கு கொடுத்தாங்க, அப்ப ஏன் நீங்க மாநில சுயாட்சி பத்தி பேசல ?


திமுக அரசின் மாநில சுயாட்சி என்பது இரட்டை வேடம் ; இது போலித்தனம். வி.பி.சிங், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் என இவர்கள் எல்லாம் பிரதமர்களாக இருந்தபோது மத்திய ஆட்சியில் திமுக அங்கம் வகித்ததே, மத்திய அமைச்சர்களாக திமுகவை சேர்ந்தவர்கள் இருந்தார்களே அப்போது எங்கே போயிற்று மாநில சுயாட்சி ?  


திமுக அரசு மத்திய கல்வி அமைச்சரின் கூட்டத்தை புறக்கணித்ததன் மூலம் மத்திய அரசோடு நல்லுறவை விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்திருக்கிறது, என்றார்.