தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் என்று கத்திரி வெயில் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 25 நாள்கள் இருக்கும் அக்னி நட்சத்திரம் வரும் 29ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நாள்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும். இதனால், மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும் என்றும், பகல் நேரங்களில் பருத்தி ஆடைகளை உடுத்த வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், குழந்தைகளை வெளியில் விளையாட விடாமலும், அவர்களுக்கு நீர்ச்சத்து குறையாத அளவுக்கு பழங்கள், தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.


இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சேலம் மாவட்டம் ஆத்தூர், தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தலா 2 செ.மீ. மழைப்பதிவாகியுள்ளது எனவும் கூறியுள்ளது.


மேலும், தமிழக கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.





மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்


வரும் 7ஆம் தேதி கடலூர், திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.


வரும்  8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மேற்கு மலையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக மாவட்டங்கள், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.



வரும் 10ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.


கோடை காலத்தில் அதிகரித்து வரும் நிலையில், மழைக்கான வாய்ப்பு செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.