நடந்துமுடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கட்சி அறுதிப் பெறும்பான்மையுடன் வெற்றிபெற்றதை அடுத்து, மே-5ம் தேதி அன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராகத் தான் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை அளித்தார். இதையடுத்து அவரை முதலமைச்சராக நியமித்த ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். பதவியேற்பு விழா நாளை (07.05.2021) காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் நடைபெற இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக, குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர்களே பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.



முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றவுடன், ஆளுநர் பதவி பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார். அதை தொடர்ந்து, அமைச்சர்கள் பதிவியேற்க உள்ளனர். பதவியேற்பு நிகழ்ச்சியையொட்டி, முதல்வருக்கான வாகனம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லம் வந்தடைந்தது. மேலும், தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அறை மற்றும் அமைச்சர்களின் அறைகள் புணரமைக்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் அறைக்கு முன்பு வைக்கப்பட இருக்கும் பெயர்பலகை தயார்நிலையில் உள்ளது.



நாளை, தமிழக முதல்வராக பதிவியேற்ற பின், மு.க ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் முதல்வர் அறையில் அமர்ந்து முதல் கோப்பில் கையெழுத்து இட இருக்கிறார். பின்னர், கலைஞர், அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, இடையில் கோபாலபுரம் இல்லம் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.