நாகர்கோவில் மாநகராட்சியின் 17ஆவது வார்டு உறுப்பினராக 21 வயதுப் பட்டதாரி இளம்பெண் கெளசுகி வெற்றி பெற்றுள்ளார். இளம் தலைமுறையினர் பெருமைப்படும் வகையில் சிறந்த இளம் கவுன்சிலர் என்று பெயர் எடுப்பேன் என கெளசுகி தெரிவித்தார். 


தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்குத் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 




இதற்கிடையில் மாநிலம் முழுவதும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே அதிக இடங்களைக் கைப்பற்றி வருகின்றன. இதனால் திமுகவினர் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். 


இந்நிலையில், நாகர்கோவில் மாநகராட்சியின் 17ஆவது வார்டு உறுப்பினராக 21 வயதுப் பட்டதாரி இளம்பெண் கெளசுகி 400க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பி.ஏ. ஆங்கிலம் முடித்துள்ள கெளசுகி, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி படிக்க விண்ணப்பித்துள்ளார். 


வெற்றிக் கொண்டாட்டத்துக்கு நடுவே 'ஏபிபி நாடு'விடம் பேசினார் கெளசுகி. ''மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னை நம்பி வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி. அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவேன். அப்பா இளஞ்செழியன் திமுக கிழக்கு மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளராக உள்ளார். பெண்களுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டதால், எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. படித்தவர்களே அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் நானும் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தேன். 




தளபதி தேர்ந்தெடுத்த வேட்பாளர் நான், எனக்கு ஆதரவு தாருங்கள் என்றுகூறிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். 10 ஆண்டுகளாக எங்களின் தொகுதி அதிமுக வசமே இருந்தது. ஆனால் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. ஆளுங்கட்சி வந்தால் தேவையான வசதிகளை எளிதில் செய்து தர முடியும் என்று மக்களிடம் வாக்குறுதி அளித்தேன். முதல்வர் ஸ்டாலினின் 8 மாத நல்லாட்சி காரணமாக எனக்கு வெற்றி வசமானது. 


17 வது வார்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் அடிப்படை வசதிகளைச் செய்து தருவேன். குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு வசதிகளை முழுமையாக நிறைவேற்றுவேன். 




கட்சிப் பாகுபாடில்லாமல் எல்லோருக்கும் பொதுவான உறுப்பினராகத் தொகுதியில் செயல்படுவேன். இளம் தலைமுறையினர் அனைவரும் பெருமைப்படும் வகையில் சிறந்த இளம் கவுன்சிலர் என பெயர் எடுப்பேன்'' என்று கெளசுகி தெரிவித்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண