தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியின் சார்பாக அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். கட்சியின் மாநிலத் துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்தார். தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக இருந்த எல்.முருகன் தற்போது மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றதை அடுத்து கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் அண்ணாமலையை நியமித்து பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தில் இருந்து ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகா சென்றார் அண்ணாமலை. தன்னுடைய அதிரடி நடவடிக்கைகள் மூலம் அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்ற அவர்,கர்நாடகாவை கலக்கும் தமிழர், கர்நாடகாவின் சிங்கம் என்ற அடைமொழியில் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வந்துபோனார். தன்னுடைய காவலர் பணியை உதறிதள்ளிவிட்டு விவசாயம் பக்கம் அண்ணாமலை வந்தபோது சோஷியல் மீடியா உலகில் அதிகம் அறியப்பட்டார். அவரின் அடுத்தடுத்த நகர்வுகள் அரசியலை நோக்கியே பயணப்பட்டது. அதன் தொடக்கமாக இருந்தது 'நம்மில் ஒரு தலைவர்' என்ற அமைப்பு. இந்த அமைப்பு தொடங்கப்பட்ட இடம் அண்ணாமலை போட்டியிட்ட அரவக்குறிச்சி.  




அரவக்குறிச்சியில் 'நம்மில் ஒரு தலைவர்' என்ற அமைப்பை தொடங்கி மக்களிடையே அறிமுகமானார் அண்ணாமலை. ஐபிஎஸ் அதிகாரி டூ விவசாயி, மக்களிடையே பேசிப்பழக ஒரு அமைப்பு என பயணப்பட்ட அண்ணாமலை அரசியலின் வாசலில் சென்று நின்றார். ஆகஸ்ட் 2020ம் ஆண்டு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.


பாஜகவில் இணைவதற்கு முன்பே அண்ணாமலையை சுற்றி அரசியல் பேச்சு வரத்தொடங்கின. ரஜினி கட்சி தொடங்குவார் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் கட்சி தொடங்குவேன், ஆனால் முதல்வர் வேட்பாளர் நானில்லை என ரஜினி வாய்ஸ் கொடுத்தார். அந்த நேரத்தில் பலரும் அண்ணாமலையை முன்னிறுத்தி பேசத்தொடங்கினர். 




ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் அண்ணாமலைதான் என அங்கங்கே பேச்சு அடிபட்டது. அந்த நேரத்தில் தான் அண்ணாமலை டெல்லி விசிட் அடித்து பாஜக பக்கம் இணைந்தார். பதவி ஏற்றபோது பேசிய அண்ணாமலை, கட்சியில் ஒரு தொண்டனாக சேர்ந்திருக்கும் தான் பதவி நோக்கத்தில் கட்சியில் இணையவில்லை. கட்சி சார்பில் எடுக்கும் எவ்வகையான முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன் என்றும் கூறினார். அவர் பேசிய சில நாட்களிலேயே பாஜவின் துணைத்தலைவராக அறிவிக்கப்பட்டார் அண்ணாமலை.


தொடக்கம் முதலே அரவக்குறிச்சியில் அறியப்பட்ட அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலில் அங்கு போட்டியிட விரும்பினார். அவரின் விருப்பப்பட்டி அரவக்குறிச்சி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக சார்பில் அண்ணாமலைக்கு நேரடிப் போட்டியாக திமுக களம் இறங்கியது. திமுக சார்பில் மொஞ்சனூர் ஆர். இளங்கோ அரவக்குறிச்சியில் களமிறங்கினார், வெற்றிபெற்றார். அண்ணாமலை இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.  


இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடியின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதை அடுத்து தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் பொறுப்புக்கு அண்ணாமலையும் நயினார் நாகேந்திரன் பெயரும் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் அண்ணாமலையைத் தலைவராக நியமித்துக் கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Also Read: சைக்கிள் ஓட்டும் இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்... யார் இந்த மன்சுக் மாண்டவியா?