கொரோனா மூன்றாம் அலை சர்ப்ரைஸாக எட்டிப்பார்க்கக் காத்திருக்கும் இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் இந்தியாவின் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக மன்சுக் மாண்டவியா பொறுப்பேற்றிருக்கிறார்.  ஒருபக்கம் தடுப்பூசி போடும் பணிகளை அரசு தீவிரப்படுத்திவருகிறது. இதற்கிடையேதான் மத்திய அமைச்சரவை விரிவாக்கப்பட்டதை அடுத்து முன்னர் ஹர்ஷவர்தன் அமைச்சராக இருந்த பொறுப்புக்கு மன்சுக் மாண்டவியா தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார்.  அவரது நியமனத்தை அடுத்து ட்விட்டரில் அவரது தவறான இங்கிலீஷ் பதிவுகளை வைத்து அவரைக் கேலி செய்துவருகின்றனர். ஒருவரது ஆங்கிலப்புலமையை வைத்து அவரது திறமையை மதிப்பிடக் கூடாது என அதற்கு எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. 






குஜராத்தைச் சேர்ந்த விலங்குகள் நல மருத்துவரான மன்சுக் மாண்டவியா பொலிட்டிகல் சயின்ஸில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர்கள் பிரிவான ஏ.பி.வி.பி.யில் நீண்டகாலம் பணியாற்றியவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வார்ப்பான இவர் அமித்ஷாவின் நெருங்கிய நண்பர். தனது 28 வயதிலேயே எம்.எல்.ஏ.ஆனவர். குஜராத்தின் சௌராஷ்டிராவில் ஹனோல் என்னும் கிராமத்தில் பிறந்த மன்சுக் மாண்டவியா தனது நடைபயணங்களுக்குப் பெயர் போனவர்.




2005ல் அந்த மாநில அமைச்சராக இருந்தபோது 123 கிமீ தூரம் நடைபயணம் மேற்கொண்டு கிராமங்களில் பெண்பிள்ளைகள் கல்வி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மகாத்மா காந்தி பற்றாளர். மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக யுனிசெஃப் அமைப்பு அவருக்குச் சிறப்பு அங்கீகாரத்தை அளித்துள்ளது. நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்ததற்காக நோட் செய்யப்பட்டவர். ஆனால் இதெல்லாம் 4 லட்சம் உயிர்களைப் பறித்துள்ள கொரோனாவை எதிர்கொள்வதற்கான தகுதியாக இருக்குமா? 






சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு ஒரு வாரம் முன்பே தனது பணிகளைத் தொடங்கிவிட்டார் மாண்டவியா. சைடஸ், பாரத் பயோடெக், சீரம் இண்ஸ்டியூட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டார். அப்போது ரசாயணம் மற்றும் உரத்துறை இணையமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 




மாநிலங்களுக்குத் தரப்படும் தடுப்பூசிகளில் கடந்த மாதம் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்திருந்த நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ச்சியாகத் தடங்கலின்றி நடப்பதை மாண்டவியா உறுதி செய்யவேண்டியிருக்கிறது.  மாடர்னா உள்ளிட்ட  புதிதாக வருகை தரும் தடுப்பூசிகள் மாண்டவியாவுக்கு இந்த வேலையை எளிமையாக்கும். ஆனால் ஹோமியோபதி மற்றும் ஆயுஷ் மருத்துவமுறையின் தீவிரப்பற்றாளரான மாண்டவியா தடுப்பூசிகளுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருவார் என்கிற சந்தேகத்தைத் தவிர்க்கமுடியாது. மூன்றாம் அலையிலிருந்து தப்பிக்க போதுமான உரிய தற்காப்பு நடவடிக்கைகளை  அரசு எடுக்க வேண்டும் என மருத்துவர்களும் மருத்துவ நிபுணர்களும் எச்சரித்துள்ள நிலையில் களப்பணிகளுக்குப் பெயர்போன மாண்டவியாவால் கொரோனாவிடமிருந்து காப்பாற்ற முடியுமா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 


2 ரூபாய் டாக்டர்...எளிய விவசாயி...முன்னாள் காங்கிரஸ்காரர் : பிரதமர் மோடியின் அமைச்சரவை 2.0 விவரம்!