மேகதாது அணை விவகாரம் சமீபகாலமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரத்தில் காட்டும் வேகம் தான் இதற்குக் காரணம். 


மேகதாது அணையக் கட்டுவது முழுக்க முழுக்க மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டுமே எனக் கூறும் கர்நாடக அரசு, கோலார், சிக்பள்ளாப்பூர், ராமநகர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளது. இந்தப் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. காவிரியில் இருந்து உபரியாக சென்று கடலில் கலக்கும் தண்ணீரை தேக்கி வைக்க இந்த அணை கட்டப்படுகிறது என்று விளக்கமளிக்கிறது. அங்கு ஆட்சிகள் மாறினாலும் கூட அணை மீதான நிலைப்பாடு மட்டும் ஆண்டாண்டு காலமாக அப்படியே இருக்கிறது.


இந்நிலையில்,  தமிழ்நாடு அல்லது கர்நாடகா என எந்த மாநிலம் அணை காட்டுவதாக இருந்தாலும், அதற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் தேவை. அந்த ஆணையத்தில் தென்மாநிலங்களின் உறுப்பினர்கள் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு நடத்தி உச்சநீதிமன்றத்தில் நாம் பெற்ற தீர்ப்பால் காவிரி நதிநீர் முறையான வகையில் பங்கிட்டுதர வேண்டும் என்ற நடைமுறை வந்துள்ளது. மேலும் காவிரி நதி மீதான எந்தவிதமான கட்டுமானம் செய்வதாக இருந்தாலும் நான்கு மாநிலங்களின் ஒப்புதலும் வேண்டும். தற்போது மத்திய அரசு கொடுத்துள்ளதாக கூறப்படும் ஒப்புதல் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது, என்று தமிழக அரசு கூறுகின்றது.


இந்நிலையில், அணை கட்டுவதில் கர்நாடக மாநில முதலைமைச்சர் எடியூரப்பா உறுதியாக இருப்பதோடு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளையும் தொடங்கிவிட்டார்.


இந்தச் சூழலில் தமிழக முதலமைச்சர் தொடங்கி அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனக் குரல் எழுப்பிவரும் நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.


அந்த அறிக்கையின் விவரம் வருமாறு:
"உச்சநீதிமன்றத்துக்கு இணையான காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை முற்றிலும் அவமதிக்கும் வகையிலும், இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையிலும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தப் பிறகும் 'மேகதாதுவில் அணை கட்டப்படும்' என்று கர்நாடக முதல்வர் அறிவித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.


மேகேதாட்டுவில் அணை கட்ட 2014ஆம் ஆண்டு கர்நாடக அரசு திட்ட அறிக்கையை தயார் செய்வதற்காக 25 கோடி ரூபாயை ஒதுக்கியபோதே, அதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும், அணை கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் கர்நாடகா எடுக்கக்கூடாது என, கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும், எந்த நீர் திட்டத்திற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தி, இரண்டு தீர்மானங்கள் தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி, என்னால் 5-12-2014 மற்றும் 27-03-2015 ஆகிய நாட்களில் முன்மொழியப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


இந்தத் தீர்மானங்கள் 12-12-2014 மற்றும் 27-03-2015 ஆகிய கடிதங்கள் மூலம் மத்திய அரசுக்கு உடனடி நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது என்பதையும் நான் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டுகிறேன். இது தொடர்பாக 26-03-2015 அன்று தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


குடிநீர் வழங்கல் என்ற போர்வையில், மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வரின் தன்னிச்சையான அறிவிப்பு, தமிழக மக்களை குறிப்பாக விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதன் விளைவாக, பாசனத்திற்கும், குடிநீருக்கும் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறையும் என்பதோடு மட்டுமல்லாமல், தமிழகம் பாலைவனமாகக்கூடிய சூழ்நிலையும் உருவாகும். இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


'அணை கட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது' என்று கர்நாடாக முதல்வர் தன்னிச்சையாக அறிவித்து இருப்பதற்கு அதிமுகவின் சார்பில் எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற ஒருதலைபட்சமான செயல் இரு மாநில உறவையும் பாதிக்கும். எனவே, தமிழக முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, மேகேதாட்டு அணை கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் கர்நாடக அரசு எடுக்காத வகையில், சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்".


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.