தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற கூட்டம் குறித்து பத்திரிகையில் பார்த்து தான் தெரிந்துகொண்டேன் என்றும் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் உறுப்பினர்கள் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், “காவிரி விவகாரத்தில் நமக்கு தாகம் மற்றும் வயிற்று பிரச்சினை போலத்தான் கர்நாடகவில் இருப்பவர்களுக்கும் அதே பிரச்சினை தான். இதில் சுமூகமாக பேசி தீர்க்க வேண்டும் என்பதால் ஆணையத்திற்கு சென்றுள்ளனர்.
அடிப்படையில் ஆளுநருக்கு சில சிக்கல்கள் உள்ளது. அவருக்கு மைண்ட் சரியில்லை. முதலில் மனிதனாக மாறவேண்டும். அவருக்கு மெண்டல் டீரிட்மெண்ட் தேவைப்படுகிறது. மேலும் தமிழக காங்கிரஸில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. காங்கிரஸ் கூட்டங்களில் எங்களை அழைப்பது வழக்கம். ஆனால் இன்றைக்கு (நேற்று) யாரையும் அழைக்காமல் கூட்டத்தை நடத்தியிருக்கின்றனர். என்ன மர்ம கூட்டம் என்பது தெரியவில்லை.
காங்கிரஸ் கூட்டம் நடந்தது எனக்கு தெரியாது. பத்திரிக்கையில் பார்த்து தான் தெரிந்துகொண்டேன். தங்கபாலு, திருநாவுக்கரசு போன்றோருக்கும் தெரியாது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்படவில்லை என்றும் முதலில் முன்னாள் தலைவர் என்றும் பின்னர் மூத்த தலைவர் என்றார்கள். தற்போது முடிச்சுபோன தலைவர் என்று சொல்கின்றனர்.
செந்தில்பாலாஜி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தலை முதல் கால் வரை வியாதி இருக்கிறது. முதலில் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் பஞ்ச பாண்டவர்கள் போல் வெற்றி பெறுவோம்” என நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டம் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் பற்றி தனக்கு தெரியாது என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.