கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) நஷ்டத்தில் இயங்கி வருகிறது. சென்னையைச் சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்ட கேள்விக்கு கடந்த 16 ஆண்டுகளில் நிறுவனத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற மொத்த லாபம் ரூ. 300 என்றும், கடந்த 5 ஆண்டுகளில் நட்டத்தில் இயங்கி வருவதாகவும் டாஸ்மாக் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக்:
1983ல் தொடங்கப்பட்ட தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (டாஸ்மாக்), மாநிலம் முழுவதும் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மது மற்றும் பீர் வகைகளை மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்து வருகிறது. மேலும், இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர் மட்டும் ஒயின் வகைகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனமும் (ரூ. 15 கோடி) அரசால் வழங்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இயங்கி வருகின்ற 11 மதுபான உற்பத்தி தயாரிப்பு நிறுவனங்கள், 7 பீர் தயாரிப்பு நிறுவனங்கள், 1 ஒயின் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றிடமிருந்து மதுபானம், பீர் மற்றும் ஒயின் வகைகளை டாஸ்மாக் கொள்முதல் செய்து விற்கிறது. உதாரணமாக, 2016- 17 நிதியாண்டில் மட்டும் டாஸ்மாக் நிறுவனத்தின் விற்பனைத் தொகை ரூ. 31,243.57 கோடியாக உள்ளது. அதன், மொத்த வருவாய் 31, 480 கோடியாகும்.
அந்த நிதியாண்டில் மட்டும் டாஸ்மாக் நிறுவனத்தின் செலவு கணக்கு 31,462 கோடியாக உள்ளது. வெறும், 25 கோடி ரூபாய் தான் லாபமாக ஈட்டியுள்ளது.
செலவினங்களுக்கு காரணம் என்ன? வியாபாரத்திற்கு கொள்முதல் செய்த சரக்கின் விலை, மதுபானம், பீர் மீதான் மதிப்பு கூட்டு வரி (Value Added Tax) ஆகியவை முக்கிய செலவீனங்களாக அமைந்துள்ளன. இந்த மதிப்பு கூட்டு வரியும், ஆண்டு உரிமைக் கட்டணமும் அரசுக்கு வருவாயாக உள்ளது. 2016- 17 நிதியாண்டில் மட்டும் ரூ. 14 கோடியை விற்பனை வரியாக டாஸ்மாக் கழகம் அளித்துள்ளது.
மேலும், டாஸ்மாக் பணியாளர் நல செலவுகள், முந்தைய ஆண்டு செலவுகள் , கடன்தீர் செலவுகள், தேய்மானம் மற்றும் இதர செலவுகளாலும் டாஸ்மாக் நிறுவனத்தின் லாபம் குறைந்து காணப்படுகிறது. நஷ்டங்களையும் சந்தித்து வருகிறது.
ட்விட்டர் பயனர் ஒருவர் இதுகுறித்து கூறுகையில், "உண்மையில், சொல்ல வேண்டும் என்றால் டாஸ்மாக் நிறுவனத்தை இலாபமகரமாக கொண்டு சென்றால் தமிழ்நாடு அரசுக்குத்தான் இழப்பு ஏற்படும். வருகின்ற லாபத்தில் ஒன்றிய அரசுக்கு கார்ப்பரேட் வரி கட்ட வேண்டும். அதுக்குப் பதிலாக அரசுக்கு வர வேண்டிய இலாபத்தை வரியாக வசூல் பண்ணினா முழுவதும் தமிழ்நாடு அரசுக்கே கிடைக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
அரசுக்கு வருவாய் இழப்பில்லை: தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கழகத்தின் மூலம் நேரடி ஆதாயம் பெறவில்லை. மாறாக, மதுபானங்களின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரியே அதன் வருவாயின் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆண்டு | ஆயத்தீர்வை வருவாய் (Excise Revenue) | மதிப்புக் கூட்டு வரி (விற்பனை வரி ) | மொத்த வருவாய் |
2014-15 | 5731.18 | 18433.77 | 24164.95 |
2015-16 | 5836.01 | 20009.57 | 25845.58 |
2016-17 (டாஸ்மாக் செயல்படும் நேரம் குறைப்பு ) | 6248.17 | 20747.08 | 26995.25 |
2017-18 | 6009.25 | 20788.71 | 26797.96 |
2018-19 | 6863.11 | 24294.72 | 31157.83 |
2019-20 | 7205.97 | 25927.27 | 33133.24 |
2020- 21 | 7821.69 | 25989.46 | 33811.14 |
2021- 22 (ஜூலை 1ம் தேதி வரை) | 1975.24 | 5932.37 | 7907.61 |
2014-15ம் ஆண்டில், இத்துறையின் மூலம் ரூபாய்.24,000 கோடியை மாநில அரசிற்கு ஈட்டித் தந்துள்ளது. இந்த வருவாய், கடந்தாண்டு 33 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு, பூரனமதுவிலக்கை அமல்படுத்தும் விதமாக, டாஸ்மாக் சில்லறை மதுபான விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களின் பணி நேரம் குறைக்கப்பட்டது. மேலும், முதற்கட்டமாக தகுதியான கடைகள் கண்டறியப்பட்டு, 500 டாஸ்மாக் சில்லறை மதுபான விற்பனைக் கடைகள் மூடவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இருந்தாலும், அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் அரசின் மொத்த வருவாய் குறையவில்லை.மதுபாங்களின் மீதான மதிப்புக் கூட்டுவரியை அதிகப்படுத்தியதன் மூலமாக தமிழக அரசு நிதியிழப்பை சரி செய்தது.