செங்கல்பட்டு மாவட்டம், தைலாவரம் புவனேஸ்வரி அம்மன் சன்னதி தெருவை சேர்ந்த ராம்குமார் (27). இவர் சென்னையில் உள்ள பச்சையப்பன் என்பவருக்கு சொந்தமான வாடகை காரில் ஓட்டுநராக பணியாற்றி வந்து உள்ளார். கடந்த 12ஆம் தேதி ராம்குமார் திருச்சிக்கு சவாரி சென்று விட்டு 14ஆம் தேதி சென்னை திரும்பியுள்ளார். அப்போது திண்டிவனம் ஆற்காடு செல்லும் சாலையில் சென்றபோது திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் சவாரி இருப்பதாக பச்சையப்பன் ராம்குமாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தொலைபேசியில் லொகேஷனை அனுப்பியுள்ளார்.
அதன்படி ராம்குமார் செய்யாறு அருகே ஆற்காடு சாலையில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோயில் அருகே சென்றார். அங்கு நின்றிருந்த 4 வாலிபர்கள் காரில் ஏறி சென்னை ஏர்போர்ட்டுக்கு செல்லும்படி கூறியுள்ளார். அதன்படி ராம்குமார் வெம்பாக்கம் சாலை வழியாக சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். திருப்பனங்காடு கிராமத்தில் சென்றபோது காரில் இருந்த 4 நபர்களில் ஒருவர், வாந்தி வருவதாக கூறி காரை நிறுத்தும்படி கூறியுள்ளாராம், காரை நிறுத்தியவுடன் ஒருவர் கீழே இறங்கினார். மற்ற 3 நபர்கள் திடீரென ராம்குமாரை கத்தியால் குத்த முயன்றனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராம்குமார் காரில் இருந்து இறங்கி ஓடினார்.
அதனைத்தொடர்ந்து 4 நபர்கள், ராம்குமாரை விரட்டிச் சென்று சரமாரியாக தாக்கி கத்தியால் கிழித்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ராம்குமார் அங்கேயே மயங்கி கீழே விழுந்தார். பின்னர் 4 நபர்கள் காரை கடத்தி சென்றனர். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த ராம்குமார், காரை கடத்தி சென்றதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கார் உரிமையாளர் பச்சையப்பனுக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் ராம்குமார் பிரம்மதேசம் காவல்துறையினர் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் ஆய்வாளர் அண்ணாதுரை மற்றும் துணைஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை காவலர்கள் கார் புக்கிங் செய்த செல்போன் நம்பரின் சிக்னலை வைத்து தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு விரைந்தனர். பின்னர் பட்டுக்கோட்டை போலீசார் உதவியுடன் அப்பகுதியில் இருந்த காரை பறிமுதல் செய்தனர். இதையடுத்து காரை கடத்தி சென்ற மதுரை போடிலைன் எல்விஸ் நகரை சேர்ந்த வேல் பாண்டி (23), காஞ்சிபுரம் மாவட்டம், ஐயங்கார் குளம் காமராஜர் நகரை சேர்ந்த சதீஷ்குமார் (31), செய்யாறு அடுத்த தூசி நத்தக்கொல்லை பகுதியை சேர்ந்த ராஜசேகர் (23) ஆகிய 3 நபர்களையும் நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து 78 ஆயிரம். ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும், வேல்பாண்டியின் நண்பர் மதுரையை சேர்ந்த வெங்கடேசன் வயது (23) என்பவரை தேடி வருகின்றனர்.
இவர்கள் 4 நபர்களும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கண்ணாடி கம்பெனியில் வேலை செய்தபோது பழக்கம் ஏற்பட்டது. அங்கு இவர்கள் சரியான முறையில் பணி செய்யாததால், அவர்களை நிறுவனத்தினர் பணி நீக்கம் செய்துள்ளனர். இதையடுத்து இவர்கள் 4 நபர்களும் சேர்ந்து காரை புக்கிங் செய்து ஆள் இள்ளாத இடத்தில் காரை நிறுத்தச்சொல்லி டிரைவரை தாக்கி காரை கடத்தி சென்று விற்பதற்கு முயற்சி செய்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வேறு எதாவது சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா என அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.