ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றில் இருந்து மீண்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 


சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.  இதில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். இதன்பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்களிடமும் அவர் வாழ்த்தி பெற்றார். இதற்கிடையில் கடந்த மார்ச் 16 ஆம் தேதி இதய பிரச்சினை காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


 டெல்லிக்கு விமானத்தில் சென்று திரும்பிய நிலையில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், ஏற்கனவே 2 முறை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர் என்பதாலும் மருத்துவர்கள் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து சிகிச்சையளித்து வந்தனர்.
இதற்கிடையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மார்ச் 20 ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. தீவிர சிகிச்சைபிரிவில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேசமயம் இதய பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.