"நீரின்றி அமையாது உலகு “ என்ற வள்ளுவனின் கூற்றினை யாராலும் மறுக்க முடியாது. இந்த பூமியில் வாழும் அத்தனை உயிரினத்திற்கும் நீர் இன்றியமையாத தேவைகளுள் ஒன்றாக இருக்கிறது. குறைந்த அளவில் தரையை தோண்டினாலே நிலத்தடி நீர் கிடைத்த காலங்கள் மாறி, இன்று பல அடி ஆழம் தோண்டினாலும் வறண்ட நிலையிலேயே இருக்கிறது பூமி. இது வருங்கால சந்ததிகளின் வாழ்க்கையை மிகுந்த கேள்விக்குறியாக்கியுள்ளது.  இதனை அறிந்த உலக நாடுகள் இணைந்து, தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தினத்தை  கடைப்பிடிக்கின்றனர்.

 






அதிகரித்து வரும் தொழிற்சாலைகள், இயற்கை வளங்களை சுரண்டல், தண்ணீருக்கான பயன்பாடு அதிகரித்தல் போன்றவைதான் இந்த காலக்கட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. சில நாடுகளில் முன் கூட்டியே மாற்று ஏற்பாடாக கடல்நீரை சுத்திகரித்து பயன்படுத்தும் முறையை விரைவாகவே துவங்கிவிட்டனர். இன்று மார்ச் 22 ஆம் தேதி தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.


5 ஆயிரம் மாணவிகள் உறுதிமொழி:


கடந்த 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு குறித்த ஐ.நா பொதுச் சபையின் மாநாட்டின் முடிவில்  உலகம் முழுவதும் தண்ணீர் தினம் கடைப்பிடிப்பது பற்றிய  யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று  தண்ணீர் தினம் என்ற  தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. 1993 முதல் உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது நன்னீர் மற்றும் இந்த குறிப்பிடத்தக்க வளத்தின் நிலையான மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் மதுரையில் யங் இந்தியா சமூக அமைப்பு, எல்.டி.சி., கல்லூரியோடு இணைந்து 5 ஆயிரம் நபர்களை கொண்டு தண்ணீர் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.





 யங் இந்தியா சமூக அமைப்பு  மதுரையில் சுற்றுச்சூழல் சார்ந்து பல்வேறு விசயங்களை முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர்.   இந்நிலையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீர் சேமிப்பு குறித்து மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மதுரை எல்.டி.சி., கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தனர். பெரிய அரங்கில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 5 ஆயிரம் நபர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக கையெழுத்து இயக்கத்தையும் துவங்கி வைத்தனர். தண்ணீர் தேவையை உணர்ந்து செயல்படவேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தினர்.



 

இது குறித்து யங் இந்தியா க்ளைமேட் சேஞ் அமைப்பை சேர்ந்த பொன்.குமார் கூறுகையில்...," நாள் தோறும் நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் அதிகளவு தண்ணீரை தேவையற்று செலவு செய்கிறோம். தண்ணீர் சிக்கனம் என்பது குறைந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதில்லை. தேவையான விசயங்களுக்கு தேவையான அளவு பயன்படுத்த வேண்டும் என்பது தான் அதன் பொருள்.



விவசாயத்தில் சொட்டு நீர் பாசனம் எப்படி தேவைக்கு ஏற்ப தருகிறதோ அதைப் போல் இருக்க வேண்டும். இப்படி தேவைகளை அறித்து இடத்திற்கு தகுந்தார் போல் தண்ணீரை செலவு செய்ய வேண்டும். தண்ணீர் தினத்தை முன்னிட்டு இவ்வாறு மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோம். 5 ஆயிரம் நபர்கள் இங்கு உறுதி மொழி ஏற்றது மிகப்பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. தொடர்ந்து கின்னஸ் விருதிற்கு பரிந்துரை செய்வோம்" எனவும் தெரிவித்தார்.