ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அஅறிவிக்கப்பட்ட நிலையியில், வேட்பாளர் போல அவரது மகன் சஞ்சய் சம்பத் பிரச்சாரத்திற்கு செல்வதால், யார் வேட்பாளர் என்பதில் சாமானிய மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.



பிரச்சாரத்தில் அமைச்சர்களுடன் சஞ்சய் சம்பத்


ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா காலமான நிலையில், அந்த தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கவுள்ளது. கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ்க்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டதால், திருமகன் ஈவேரா மறைந்தபிறகு மீண்டும் அந்த தொகுதியில் காங்கிரசே போட்டியிடும் என்று திமுக தலைமை அறிவித்தது.


இந்நிலையில், வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகனும், மறைந்த திருமகன் ஈவேராவின் சகோதரருமான சஞ்சய் சம்பத் தேர்தலில் போட்டிட சீட் கேட்டார். அவரோடு சேர்ந்து ஈரோடு மாவட்டத் தலைவர் மக்கள் ராஜனும் இந்த முறை தனக்கு கட்சித் தலைமை சீட் கொடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார். இறுதியாக, இருவரும் காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவை சந்தித்து விருப்ப மனு அளித்த நிலையில், திடீர் திருப்பமாக சஞ்சய் சம்பத்தின் தந்தையும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக காங்கிரஸ் தலைமை அறிவித்தது.



வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்


ஈரோடு இடைத் தேர்தல் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவிற்கு முக்கியமான தேர்தல் என்பதால், முதல்வர் ஸ்டாலினே நேரடியாக தலையிட்டு ஈவிகேஎஸ் இளங்கோவனை போட்டி வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், வேட்பாளர் அறிவிப்பில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. இருந்தாலும், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகள் இருப்பதாலும் வயது முதிர்வு காரணமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத நிலையில் இருந்து வருகிறார்.


இந்நிலையில், அதிக கூட்டம் கூடும் இடங்களிலும் இரவு நேரங்களிலும் ஈவிகேஎஸ் இளங்கோவன் செல்ல முடியாத இடங்களுக்கு காங்கிரஸ் துண்டை தோளில் அணிந்தபடி அவரது மகன் சஞ்சய் சம்பத் பிரச்சார வாகனத்தில் ஏறி வாக்குக் கேட்டு வருகிறார். அவரோடு திமுக அமைச்சர்களும் ஒரே வாகனத்தில் சென்று வாக்கு வேட்டை நடத்தி வருவதால், அப்பகுதி மக்கள் யார் வேட்பாளர் என்பதில் குழப்பமடைந்துள்ளனர்.




அதிமுகவினரோ, உடல் நல பாதிப்பு இருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிரச்சாரத்தையே சரியாக செய்ய முடியாத நிலையில் உள்ளபோது, வெற்றி பெற்றால் இந்த தொகுதிக்கான மக்கள் நலத் திட்டங்களை எப்படி செயல்படுத்துவார் என்ற கேள்வி எழுப்பி பரப்புரை செய்து வருகின்றனர்.


இருந்தாலும் காங்கிரஸ் கட்சியினரை காட்டிலும் திமுக அமைச்சர்கள் தலைமையில் களமிறங்கியிருக்கும் பிரம்மாண்ட படையினர் ஈரோடு கிழக்கில் வீதி வீதியாக வாக்கு சேகரித்து வருகின்றனர். மாவட்ட அமைச்சர் முத்துசாமி, மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு உள்ளிட்டோரும் அன்பில் மகேஷ், செந்தில்பாலாஜி ஆகியோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதே நேரத்தில், கூட்டணியில் உள்ள இடதுசாரிகளான இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுகவினர் கண்டுகொள்வதில்லை என்றும், விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்து வருவதில்லை என்றும் குமுறல்கள் எழுந்துள்ளன.


திமுகவிற்கு இந்த தேர்தல் வெற்றி என்பது கவுரவ பிரச்னை என்பதால், கடந்த தேர்தலை காட்டிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டி உள்ளது என்பதாலும் எப்படியாவது ஈவிகேஎஸ் இளங்கோவனை பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தீவிரமாக இயங்கி வருகின்றனர். அதனால்,  சாம, தான, பேச, தண்டம் என அனைத்து வித்தைகளையும் களத்தில் இறக்கி திமுகவினர் வேலை செய்து வருகின்றனர்.


அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்து, ஈரோடு கிழக்குத் தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்ற முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதால், காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் நின்றாலும் இது திமுக அதிமுக இடையான நேரடி மோதலாக மாறியிருக்கிறது. கொங்கு மண்டலத்தில் தனக்கு தனித்த செல்வாக்கு உள்ளது என கூறிவரும் எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அந்த கட்சியினரும் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.


எனவே, இந்த தேர்தலில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் ? யார் 2வது இடத்திற்கு வரப்போகின்றார்கள் ? வாக்கு வித்தியாசம் எவ்வளவு இருக்க போகின்றது என்ற மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஈரோடு மாவட்ட மக்களை தாண்டி தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது.