சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். 


நீண்ட இழுபறிக்கு பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் ஈபிஎஸ் தரப்பிலான அதிமுக வேட்பாளர், இரட்டை சிலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதனால்,  திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் ஈபிஎஸ் தரப்பிலான அதிமுக வேட்பாளரான தென்னரசு இடையே நேரடி போட்டி நிலவியுள்ளது. அதோடு நாம் தமிழர், தேமுதிக கட்சிகளும் நேரடியாக களமிறங்கியுள்ளன.


வேட்புமனு: 


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் (பிப்ரவரி,07) நிறைவடைந்தது. இறுதிநாளான நேற்று மட்டும் 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேட்புமனு தாக்கல் நடைபெறாதநிலையில், நேற்று முன் தினம் வரை 59 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். 


டோக்கன்:


வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் மனுதாக்கல் செய்ய ஏராளமானவர்கள் குவிந்தனர். இதனால், ஈரோடு மாநகராட்சி அலுவலகம் கூட்டம் நிரம்பி வழிந்தது. பகல் 11 மணியில் இருந்து வேட்பு மனுதாக்கல் செய்ய ஒவ்வொருவராக அனுப்பப்பட்டனர். தொடர்ந்து, மதியம் 3 மணிக்கு வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்தது. 


இருப்பினும், பலர் வேட்பு மனுதாக்கல் செய்ய காத்திருந்ததால் டோக்கன் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் பெற்றனர். 3 மணிக்கு பிறகு மட்டும் 26 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


மனுதாக்கல் செய்த 96 பேர்:


ஈரோடு இடைத்தேர்தலில் நேற்று ஒரே நாளில் 37 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து, இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.  


இந்தநிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை மறுதினம் (பிப்ரவரி.10) கடைசி நாளாகும். அன்றைய தினத்தின் இறுதியில்தான் இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியாகும். 






வாபஸ் பெறப்போகும் அமமுக, ஓபிஎஸ் தரப்பு:


காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கேஎஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதிமுக ஓபிஎஸ் தரப்பில் செந்தில் முருகனும், அமமுக வேட்பாளர் சிவபிரசாத்தும் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவார்கள் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்தது. இதையடுத்து, இவர்கள் இருவரும் வருகிற 10ம் தேதி தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற இருக்கின்றனர்.