ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை உச்சநீதிமன்ற உத்தரவால் தற்போதைக்கு சரி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அதிமுகவின் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்து, பொதுக்குழு அங்கீகரித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது பாஜகவினர் யாரும் தென்னரசுவுடன் வரவில்லை.
கடந்த வாரத்தில் தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருப்பதி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாஜகவின் முடிவுக்காக அதிமுக (எடப்பாடி அணி) காத்திருந்தால் காத்திருக்கட்டும் என கூறியிருந்தார். அடுத்த நாளே எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பணிமனையை திறந்தது. அதில் பாஜக தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெறவில்லை. மேலும், அதிமுக தனது கூட்டணியின் பெயரை தேசிய ஜனநாயக கூட்டணி என இருந்ததை தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என மாற்றினர். அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்னால் அதிமுக ஐடி விங் சார்பிலும், பாஜக ஐடி விங் சார்பிலும் மாறி மாறி வார்த்தைப் போர் ட்விட்டரில் நடைபெற்றது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்ய பாஜகவினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஈரோடு கிழக்கில் சுமார் 68 ஆயிரத்துக்கும் மேல், சிறுபான்மையினர் இருப்பதால், அவர்களின் வாக்குகளைப் பெறவும் அதிமுக இந்த போக்கினை கடைபிடிப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் இந்த செயல் தற்போது ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, தமிழ்நாடு பாஜகவின் முதல் நிலை தலைவர்களாக உள்ளவர்கள் இடத்தில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தான் பாஜக மற்றும் அதிமுக என்பதை கடந்து, எடப்பாடியிடம் கூடுதல் நெருக்கம் காட்டுவதாக எண்ணுகிறார்கள் என கூறப்படுகிறது. மேலும், அண்ணாமலையிடம் பலமுறை இது குறித்து சூசகமாக எடுத்துக் கூறியும் அவர் அதை கண்டு கொள்ளாமல் இருக்கிறார் என்று பேசிக்கொள்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது. தேசிய தலைமையை இது குறித்து பேசலாம் என்ற முடிவுக்கு வரும் போது, பாஜக மேலிடம் அண்ணாமலைக்கு கூடுதல் பொறுப்பை வழங்கியுள்ளதால், அவர்களும் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார்களாம்.
அண்ணாமலையைப் பொறுத்தவரையில், இந்த இடைத்தேர்தலை ஒரு தூண்டில் புழுவைப் போல பயன்படுத்த வேண்டும் என்ற மன நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தான் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தினை மக்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என செய்தியாளர்கள் சந்திப்பிலும், அதிமுக வெற்றி பெற நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் தொடர்ந்து பேசி வருகிறாராம். இந்நிலையில் உறங்காமல் உழைப்போம் என அறிக்கையும் விட்டுள்ளார் அண்ணாமலை.
ஆனால், ஒற்றைத் தலைமையை ஏற்றுக் கொண்டு வந்தால் மட்டும் தான் ஓபிஎஸ்-ஐ ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் எடப்பாடி இருப்பதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் ஓபிஎஸ்க்கு பாஜக உதவும் மன நிலையில் இருப்பதாக ஆரம்பம் முதலே எடப்பாடிக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து பாஜகவின் கருத்துக்கு எடப்பாடி தரப்பில் இருந்து சமூக வலைதளங்களில் பதிலடிகள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வாய் திறக்கவில்லை. மாறாக இடைத் தேர்தலில் பாஜக போட்டியிட்டால் நாங்கள் போட்டியிட மாட்டோம் என அறிவித்து இருந்தார். ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த அறிவிப்பு அவரது அணியில் இருந்த தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை கிளப்பியது.
பாஜக தொடர்ந்து பன்னீர் செல்வத்திற்கு உதவுவதாக கருதும் எடப்பாடி இதனாலேயே, பாஜகவை ஓரம் கட்டுவதாக கூறப்படுகிறது. பாஜகவை அதிமுக கூட்டணியில் இருந்து அப்புறப்படுத்தினால் தான் திமுக மீதான அதிருப்தி என்பது தனக்கு சாதகமாக மாறும் என்பதை அதிமுகவின் மேல்மட்ட தலைவர்கள் இடத்தில் எடப்பாடி பேசியதாக கூறப்படுகிறது. இதன் நீட்சிதான் பாஜக தலைவர்களின் புகைப்படமும், பாஜக தலைமையில் இருந்த கூட்டணி பெயர் இடம்பெறாததற்கு காரணம் என கூறப்படுகிறது. மக்களவை பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் பட்சத்தில் எடப்பாடி கொஞ்சம் எச்சரிக்கையாக தான் இதனை கையாள்வார் என கூறப்படுகிறது.