ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக த.மா.கா தலைவர் ஜி.கே வாசனை இன்று அதிமுக தலைவர்கள் சந்திப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற திருமகன் ஈவேரா, மாரடைப்பு காரணமாக காலமானதால், அந்தத்தொகுதிக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிப்பு:
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற திருமகன் ஈவேரா, மாரடைப்பு காரணமாக காலமானதால், அந்தத்தொகுதிக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில், கடந்த முறை அதிமுக கூட்டணி சார்பில், தமாகா சார்பில் களமிறங்கிய யுவ்ராஜ், இம்முறையும் அங்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து, கட்சித்தலைவர் ஜி.கே. வாசன் மூலம் அதிமுக-வின் எடப்பாடி பழனிச்சாமியுடன் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று அதிமுகவின் எடப்பாடி தரப்பினர் த.மா.கா தலைவர் ஜி.கே வாசனை சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த முறையும் யுவராஜையே போட்டியிட வைக்க எடப்பாடி பழனிசாமி முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேர்தல் செலவு முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் திட்டம் என கூறப்படுகிறது. அதிமுக சார்ந்த வழக்கு தீர்ப்புக்காக உச்சநீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், அதிமுக போட்டியிடுவதில் சிக்கல் உள்ளது. அதனால் த.மா.கவை போட்டியிட சொல்ல வாய்ப்பு என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை தீர்ப்புக்கு முன்னரே எடப்பாடி பழனிசாமி போட்டியிட நினைத்தால் வேறு ஒரு சின்னத்தில் போட்டியிட கட்டாயம் ஏற்படும் நிலை உள்ளதால் தா.மா.க சார்பில் தேர்தலில் போட்டியிடுவார்கள் எனக் கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ள பாஜக தரப்பில் தேர்தல் பணி குழு அமைக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் 14 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
2024 தேர்தலில் ஈரோடு தொகுதியில் அண்ணாமலை போட்டியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இடைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது முக்கியத்துவம் பெறுகிறது. வாக்கு வங்கி, மக்களின் ஆதரவு ஆகியவற்றை கணித்து நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் பரிச்சார்த்த முயற்சி இது எனக் கூறப்படுகிறது.