ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள் கொண்டு வந்த, கணினி மற்றும் யுபிஎஸ்ஸில், மறைத்து வைத்திருந்த தங்கத்தகடுகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். 900 கிராம் தங்கத் தகடை கைப்பற்றி, இரண்டு பேரையும் கைது செய்தனர்.

 

உள்ளாடைக்குள் மறைத்து

 

இதையடுத்து சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னை மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த இரண்டு பெண் பயணிகளிடம் இருந்து 766 கிராம் தங்க நகைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனோடு இரண்டு பெண் பயணிகளையும் கைது செய்தனர். மேலும், இந்நிலையில் துபாயிலிருந்து தனியார் பயணிகள் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சோதனையிட்டனர். அதில் கடலூரைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த, 645 கிராம் தங்க பசையைக் கைப்பற்றினர். அந்தப் பயணியையும் கைது செய்தனர். அதன் பின்பு இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இலங்கை பெண் பயணிகள் இருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

 

ரூ. 1.59 கோடி மதிப்புடைய 3.14 கிலோ

 

அவர்கள் உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல், இரண்டு பெண் பயணிகளையும், பெண் சுங்க அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டபோது, அவர்கள் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த பார்சல்களில் 837 கிராம் தங்கப் பசையை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, 2 பெண் பயணிகளையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அடுத்தடுத்து நடத்திய சோதனைகளில், நான்கு விமானங்களில், சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1.59 கோடி மதிப்புடைய 3.14 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி, நான்கு பெண்கள் உட்பட ஏழு பேரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.