சட்டம் ஒழுங்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி  வந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டம் -  ஒழுங்கு நிலை குறித்து இன்று ஆலோசனை நடத்துகிறார். 


தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு தமிழ்நாடு அரசின் ஆட்சிப் பொறுப்பேற்றது. அப்போது முதலமைச்சராக மு.க. ஸ்டாலினும், அவருடன் துறை அமைச்சர்களும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டனர். அதில் முதலமைச்சர் வசம் உள்துறை உட்பட பல்வேறு அமைச்சகங்கள் ஒப்படைக்கப்பட்டன. பொதுவாக முதலமைச்சராக யார் பொறுப்பேற்றுக் கொண்டாலும், அவர்கள் உள்துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எண்ணுவது வழக்கம். 


அவ்வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வசம் உள்துறை உள்ளது. உள்துறை கட்டுப்பாட்டில் தான் காவல் துறை உள்ளது என்பதால் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்குக்கு முதலமைச்சரே முதல் பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, குறிப்பாக கனியமூர் பள்ளி விவகாரத்துக்குப் பின்னர் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சியான  அதிமுக மற்றும் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். 


இந்நிலையில், கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை திமுக நிர்வாகிகளாலேயே கொடுக்கப்பட்ட விவகாரம் ஆளும் திமுக மீதான சட்டம் - ஒழுங்கு குறித்த குற்றச்சாட்டுக்கு சரியான ஆதாரமாகிப் போக இந்த விவகாரம் பெரிதும் பேசு பொருளானது. உடனடியாக குற்றம் சாட்டப்பட்ட திமுக நிர்வாகிகளை திமுகவில் இருந்து  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நீக்கினார். அதன் பின்னர், காவல் துறை குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 


ஆளும் திமுக அரசின் மீது சட்டம் - ஒழுங்கு சீர் கேட்டிற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக வேங்கை வயல் தீண்டாமை சம்பவம் அரங்கேற எதிர் கட்சிகள் இதனையும் தங்களது குற்றச்சாட்டு வரிசையில் சேர்த்துக்கொண்டனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை சிறப்பாக செயல்படுத்த இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். 


ஏற்கனவே ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் ரவுடிகள் மீது இருந்த பழைய வழக்குகளை தூசி தட்டி அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றனர். முதலமைசர் சட்டம்  - ஒழுங்கை சீராக கட்டுக்குள் வைத்திருக்க காவல்துறையை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டிம் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வியாழக்கிழமை, ஜனவரி 19) ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.


சென்னையில் உள்ள  தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக்  கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த அலோசனைக்  குற்றச்சம்பவங்களை தடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுதல், சட்டம்- ஒழுங்கை உரிய முறையில் பராமரிக்க மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்த முக்கிய  ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் பாதுகாப்பை தீவிரப்படுத்துவது குறித்தும், இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.