ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இரு பெரும் திராவிட கட்சிகளும் தேர்தலில் முனைப்பு காட்டி வருகிறது.


ஈரோடு இடைத்தேர்தல்:


இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் களம் காணும் நிலையில், அக்கூட்டணியின் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன், பல்வேறு தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்.


ஆளும் தரப்பில் காங்கிரஸ் வேட்பாளர் உறுதியான நிலையில், பிரதான எதிர்கட்சியான அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் அதிமுக போட்டியிடுமா? அல்லது பாஜக போட்டியிடுமா? என்பதில் தொடர் குழப்பம் நீடித்து வருகிறது.


அதிர்ச்சி தந்த ஏ.சி.எஸ்.


இருந்தபோதிலும், அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறது. அந்த வகையில், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகத்தை சந்தித்த எடப்பாடி தரப்பு ஆதரவு கோரியது. ஆனால், அதை அவர் நிராகரித்துள்ளார். மேலும், பாஜக எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால், எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


இதற்கிடையே, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் இடைத்தேர்தலில் முனைப்பு காட்டி வருகிறது. பாஜக தலைவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வாசன் ஆகியோரை சந்தித்து பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.


2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றது. 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றிருந்தார். அவர் மாரடைப்பு காரணமாக எதிர்பாராத விதமாக உயிரிழக்க, அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.


பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப் பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


2021 தேர்தலை போலவே இந்த முறையும் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது திமுக. ஆனால், முன்னதாக, வேட்பாளர் தேர்வில் தொடர் குழுப்பம் நிலவி வந்தது.


மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தை இளங்கோவனை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் மேலிடமும் திமுகவும் விரும்புவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால், தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என இளங்கோவன் கூறினார்.


மேலும், இந்த இடைத்தேர்தலில் இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட முனைப்பு காட்டி வந்ததாகவும் கூறப்பட்டது. எனவே, வேட்பாளர் தேர்வில் தொடர் குழுப்பம் நீடித்து வந்தது. இறுதியில், இளங்கோவனே வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.